சஜித்தை ஆதரிப்பதற்கு மனோ அணி இணக்கம்.
வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கான ஆரம்பகட்ட இணக்கப்பாட்டை தமிழ் முற்போக்குக் கூட்டணி மேற்கொண்டுள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நேற்று இடம்பெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மலையக மக்கள் சார்ந்த பல்வேறு அம்சங்கள் அடங்கிய யோசனைத்திட்டம் ஒன்றையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சமர்ப்பித்து பேச்சு நடத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த யோசனைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆழமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த யோசனைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை, சஜித் பிரேமதாஸ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி கோரவுள்ளது.
குறித்த விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டால், எதிர்வரும் 8 திகதி ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நேற்றைய அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.