கைதான வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்க மறியல் (Photo /Video)
சாவகச்சேரி வைத்தியசாலை சர்ச்சைகளை ஏற்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் இன்று மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (02) மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி புகுந்ததாக மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் மேற்கொண்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக 7 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் உறுதி செய்துள்ளனர். வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களினால் இந்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மையில் பிரசவத்துக்காக வந்த பெண் ஒருவர், இரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் விசாரணைகளை நடாத்திவரும் நிலையில், நேற்று(02) இரவு 9.00 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர் அர்ச்சுனா அனுமதியின்றி உள் நுழைந்து கடமையிலிருந்த வைத்தியர் அடங்கலாக பணியாளர்களுடன் விவாதம் செய்தமை தொடர்பில் மன்னார் பொலிஸில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் அஷாத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா மன்னார் மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று பிற்பகல் 2.10 அளவில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் அவரை எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக , “நேற்று இரவு எங்களுடைய வைத்தியசாலைக்கு ராமநாதன் அர்ச்சுனன் என்ற வைத்தியர் ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டு எங்களுடைய வைத்தியசாலைக்குள் பிரவேசித்து வைத்தியர்களோடு தர்க்கம் புரிந்து இடையூறு ஏற்படுத்தியது. அதேபோன்று அங்கு சென்று புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்திருக்கின்றார்கள் இதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.
ஒரு தாயின் மரணம் ஏற்பட்டிருந்தது அது கவலைக்குரிய விடயம். எல்லோருக்கும் இளம் தாய் ஒருவரது மரணம் என்பது கவலையான விடயம் இது சம்பந்தமாக ஏற்கனவே உரிய நீதியான விசாரணைகள் நடத்துவதற்கு ஏற்கனவே மத்திய அரசின் சுகாதார அமைச்சர் மூலமாக ஒரு குழுவும், எங்களுடைய மாகாண சுகாதார சேவை செயலாளர் மூலமாக ஒரு குழுவும், அமைக்கப்பட்டிருக்கின்றன” என மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஷாத் தெரிவித்துள்ளார்.