எதிர்மறைத் தாக்கம்- மலையாள ”திருஷ்யம்” மற்றும் தமிழ்த் திரைப்படம் ”96”

பல குடும்பங்களுக்கு அச்சுறுத்தலான வெளிவந்த  இரு தென்னிந்திய சினிமாக்கள்.  ஒன்று மலையாளத்திரைப்படம் ”திருஷயம்” அடுத்தது தமிழ் திரைப்படம்  ”96”.  இரு சினிமாக்களும் வெற்றி திரைப்படங்கள். இருப்பினும் கருத்தாக்கத்தை பொறுத்தவரை மோசமான படங்கள்.  சுவையான சாப்பாட்டில் விஷத்தை புரட்டி சமூகத்திற்கு கொடுத்த இரு திரைப்படங்கள் என்றால் மிகை ஆகாது.

இரு படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது அந்தந்த மொழியில் சூப்பர் ஸ்டார் நிலையிலுள்ள நடிகர்கள். சினிமா யுக்திகள் , உரையாடல்கள், ஒளிப்பதிவு, கதை திருப்பம் என மக்களுக்கு சுவாரசியத்தை அள்ளி கொடுத்திருந்தாலும் இரு படங்களும் இந்த சமூகத்திற்கு கொடுத்த தீங்கு கொஞ்ச நஞ்சமல்ல.

 

 

 

 

 

 

 

 

ரஜினியின் ஸ்டைலான  சில திரைப்படங்கள் பெண்களை வார்த்தைகளால் வன்மம் செய்யும், குடிகார பொறுக்கி ஆண்களின் செயலை ’ஆண்மை’ என போற்றி இரண்டு தலைமுறை ஆண்களை அதன் தாக்கத்திலிருந்து வெளிவர விடவில்லை.  இரு தலைமுறைகள் குடி, புகைக்கு அடிமையாக மடிய வைத்ததில்  ரஜினியின் திரைப்படங்கள் பெரிதும் பங்காற்றியது.  மேலும் மக்கள் காப்பாளர் போன்ற ஒரு மாயத்தோற்றத்தில் வைத்து வெற்று தலைமையை உருவாக்கவும்  இத் திரைப்படங்களை பயன்படுத்தி கொண்டார்.

அதே போலத்தான். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் , நடிகை மீனா நடிப்பில் 2013 ல் வெளிவந்த ’திருஷயம்’ என்ற மலையாளப்படம் . அதன் மறுபதிப்பாக  2015 ல் பாபநாசம் என்ற பெயரில் தமிழில் கமல் – கௌதமி ஜோடியுடனும் அதே திரைப்படம்  அஜய் தேவகன், ஸ்ரேயா நடிப்பில்  ஹிந்தியிலும் வெளிவந்தது.

ஒரு இடைத்தரக் குடும்பத்திலுள்ள மாணவி, பள்ளி சுற்றுலா பயணம் செல்கிறார். அங்கு வைத்து  உடன் படிக்கும் பணக்கார, ஒரு உயர் போலிஸ் அதிகாரியின் மகன் மறைந்திருந்து மாணவி குளிப்பதை  படம் பிடிக்கிறான். இதை வைத்துக்கொண்டு பெண்ணை தகாத செயலுக்கு வற்புறுத்துகிறான்.  ஒரு கட்டத்தில் பெண்ணின் தாயாரையும் அழைக்கிறான். அச்சத்திற்கு உள்ளான குடும்பத் தலைவி மாணவனை அடித்து கொன்று விடுகிறார். பின்பு குடும்பத் தலைவன் இந்த கொலையை மறைத்து எவ்வாறாக தனது குடுமபத்தை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றினான் என்பது தான் கதை.

இந்த கதையை திரையில் கண்ட குற்ற மனநிலை கொண்ட பல மனிதர்கள் தங்கள் மனைவியை, கணவனை, சட்டத்திற்கு தெரியாது கொலை செய்து மாட்டிக்கொண்டனர். மேலும் சிலர் தகாத படங்களை வைத்து மிரட்டி பணம் பிடுங்கும் தொழிலுக்கும் இறங்கினர். சட்டத்தின் மேல் நம்பிக்கையும் , பயம் மற்றும் விழிப்புணர்வு அற்று தங்களால் என்ன குற்றம் செய்தாலும் தப்பித்துக்கொள்ளலாம் என்ற குருட்டு தைரியத்தை இத் திரைப்படங்கள் சிலருக்கு கொடுத்தன.

இந்த திரைப்படம் சமகால  தொழில்நுட்பம் சார்ந்த பார்வையை  30 வருடம் முன்புள்ள சமூக சூழலுக்குள் தள்ளியது.  தகவல் தொழில்நுட்பம் பயன்பாட்டை பற்றி அச்சம் கொடுத்தது.  சட்டத்திற்கு புறமான தகாத செயல்களில்  ஈடுபடுகிறவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன்பு மாட்டுபடுவார்கள் என்பதை புரிய வைப்பதை விடுத்து எவ்வாறாக சட்டத்தை கையிலெடுத்து கொலை செய்து தப்பிக்கலாம் என்ற தவறான செய்தியை சமூகத்திற்கு கொடுத்தது. பெண்களின் நவீன ஊடக பயன்பாட்டை ஒடுக்கிய மனநிலையை வளர்க்கும் படமாகவே  இது இருந்தது.

சமூகத்தில் எதிர்மறையான சூழலை ஏற்படுத்திய அடுத்த திரைப்படம் ”96”. பள்ளி நண்பர்கள் 20 வருடங்கள் கடந்த நிலையில் ,  மீண்டும் சந்தித்துக் கொண்ட போது என்ன நடந்தது என்பதே இத்திரைப்படத்தின் கருத்தாக்கம். பள்ளி காதலன், காதலி நினைவாக கல்யாணம் கூட செய்யாமல் கட்ட பிரம்மசாரியாக வாழ்கிறான். பள்ளி காதலனுடன் ஒரு நாள் முழுக்க பயணித்து விட்டு கைவிரல் கூட படாமல் மனமில்லா மனதோடு , தன் சொந்த கணவர் , குழந்தையிடம்  திரும்பி  போகிறாராம் பள்ளிக்காதலி.

இந்த திரைப்படம் வெளியான பின்பு பல பள்ளி நண்பர்கள் , வாட்ஸாப்பிலும், முகநூல் வழியாகவும் தங்களது பழைய பள்ளி நண்பர்களைக் கண்டு பிடித்து  ஒன்று சேரு ம் நிகழ்வுகள் நடத்தும் முறை அதிகமானது.  பல பள்ளிகள் மீட்டு கட்டப்பட்டது. இதுவரை நல்லது என்றாலும்  ,  அதற்கு அப்பால் நடந்தது தான் கற்பனை செய்து பார்க்க இயலாத முட்டாள் தனங்கள். தங்களது கடந்த கால காதலைப் பற்றி காவியம் எழுத பலர் ஆரம்பித்தனர் .

திரைப்படம்  , சுவாரசியமான காட்சி அழகியலில் மிக நுட்பமாக எடுக்கப்பட்ட படத்தை நம்பி  ,  கதையில் இருந்த கற்பனையை பலர் நிஜமென நம்பினர். தங்களூக்கு 15 – 17 வயதுகளில் இருந்த காதலர்களை தேடிப்போய் பல சிக்கல்களில் சிக்கி கொண்டனர்.  பதின்மபருவத்தில் இருந்த ஈர்ப்பை அமரத்துவமான காதல் என நினைத்துக் கொண்டு  , பல பெண்கள் , அரசனை நம்பி புருஷனை கை விட்டது போல  , பழைய காதலனை நம்பிப்போய்  , வாழ்ந்த வாழ்க்கையை இழந்தனர். 

சில ஆண்கள் வீட்டிலிருக்கும் தன் சொந்த மனைவி குழந்தைகளை மறந்து  , பள்ளி காதலிகளை தேடிப்போய் உயிரை எடுத்தனர் , சிலர் உயிரை கொடுத்தனர், சிலர் இழந்தனர். பலர் கொல்லப்பட்டனர். திருமணம் முடித்து குடும்பத்தில் பாட்டியாகும் வயதில் இருந்த பெண்களின் பூப்போன்ற மென்மையான மனதை  கிள்ளி விட்டு  , வேடிக்க பார்க்க  ,  வக்கிரமான ஆண்கள் கிளம்பினர்.  வாழ்க்கைச் சுமையில் சோர்ந்து போயிருந்த  பெண்கள் புது பட்டாம் பூச்சி  , வயிற்றில் பறக்குதோ என நினைத்து கையிலுள்ளதை விட்டு அற்பத்தனமானவர்களின்  வலையில் விழுந்து சின்னாபின்னமாகி தங்கள் வாழ்க்கையை தொலைத்தனர். இதில் சில முற்போக்கு பெண்ணிய, ஆணியவாதிகள் சினிமாவில் ஏன் கட்டிப் பிடிக்கவில்லை, முத்தம் கொடுக்கவில்லை என விவாதித்து கொண்டிருக்க,  நிஜ பழைய காதலர்கள் , சினிமாவில் விட்டு வைத்ததை தாங்கள் தொடர போவதாக நினைத்து  பல பல பிரச்சினைக்கு உள்ளாகினர்.

வெறும் ”பப்பி” காதலை, சிறு வயதிற்கான இயல்பான உணர்வை  ஆகா ஓஹோ என புகழ்ந்து அதை எவ்விதமேனும் அடைந்தே தீர வேண்டும் என நம்பவைத்து ‘தான் உண்டு, தன் குடும்பம் உண்டு’ என இருந்த எளிமையான வெகுளிப்பெண்களை  , குடும்பச் சுவர் தாவ வைத்து பல குடும்பங்களை அழித்தது இத்திரைப்படம் என்றால் மிகையாகாது.

திரைப்படம் என்பது மக்களை மகிழ்ச்சியடைய செய்ய மட்டுமல்ல , நேர்மையான வாழ்க்கைக்கும் உதவும் படி சிந்திக்க வைக்கவும் உதவியிருக்க  வேண்டும். நிஜத்திற்கும் கற்பனைக்குமான தூரத்தை தவறாக காட்டிய பல மனிதர்களை விட்டில் பூச்சிகளாக சாகடித்தனர்.

இதே காலத்தில் தான் பாலிவுட்டில் லஞ்சு பாக்ஸ், ஒன்ஸ் அகெய்ன் போன்ற படங்கள் பெண்களையும் , ஆண்களையும் சிந்திக்க வைக்கும் சினிமாவாக  வந்து கொண்டிருந்தன.

– ஜோ

 

Leave A Reply

Your email address will not be published.