அருகிலிருந்து பாய்ச்சப்பட்ட எறிபடை மூலம் ஹனியே கொல்லப்பட்டார்
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) பக்கத்திலிருந்து பாய்ச்சப்பட்ட எறிபடை மூலம் கொல்லப்பட்டதாக ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
தெஹ்ரானில் ஹனியே தங்கியிருந்த விருந்தினர் இல்லத்துக்கு வெளியிலிருந்து சுமார் 7 கிலோகிராம் எடையுள்ள எறிபடை பாய்ச்சப்பட்டதாக அது சொன்னது.
ஈரானிய அதிபர் மசூத் பெசேஷ்கியான் (Massoud Pezeshkian) பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஹனியே தெஹ்ரான் (Tehran) சென்றிருந்தார்.
இஸ்ரேல் வகுத்துக் கொடுத்த திட்டம் அமெரிக்காவின் ஆதரவோடு செயல்படுத்தப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியது.
ஹனியேவின் மரணம் குறித்து இஸ்ரேல் இதுவரை எதுவும் சொல்லவில்லை.
ஹனியே கொல்லப்பட்டதற்குப் பிறகு ஈரானிய ராணுவ அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று New York Times தெரிவித்துள்ளது.
தற்போது ஈரானிய உளவுத்துறை ஹனியே மரணம் குறித்து விசாரித்து வருவதாக அது சொன்னது.
ஹனியே தங்கியிருந்த வீட்டின் பாதுகாவலர்கள் விசாரிக்கப்படுகின்றனர். அவர்களின் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னிலக்க சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஈரானிய அரசியல் தலைவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறை முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.