தலையில் தாக்கிக் கை, கால்கள் முறிக்கப்பட்டு பிறந்து 45 நாளான ஆண் குழந்தை படுகொலை யாழ். அளவெட்டியில் கொடூரம் பொலிஸார் தீவிர விசாரணை.
யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் குழந்தையின் தலையில் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் செயற்கையான முறையில் மரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்த 45 நாளான குழந்தை நேற்று அளவெட்டிப் பகுதியில் உயிரிழந்தது.
குழந்தைக்குத் தாய் பால் ஊட்டிய நிலையில் சில மணி நேரங்களுக்குப் பின்னர் குழந்தை மயக்கமுற்றது என்று தெரிவிக்கப்பட்டு குழந்தை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது குழந்தை உயிரிழந்தது என்று வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.
குழந்தையின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில் மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுவதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குழந்தையின் கை, கால்கள் முறிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தையின் தலையில் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் செயற்கையான முறையில் மரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
குழந்தையின் தந்தை தங்கு வேலைகளுக்குச் சென்று வந்த நிலையில் தாயுடனேயே குறித்த குழந்தை வளர்ந்துள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.