மாவட்ட அமைப்பாளர் பதவிகளில் இருந்து பிரசன்ன, காஞ்சன, சந்திரசேன, ரமேஷ் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (பொஹொட்டுவ) கம்பஹா, அநுராதபுரம், மாத்தறை மற்றும் காலி மாவட்டத் தலைவர்கள் பதவிகளை வகித்த மூன்று அமைச்சர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்கிவிட்டு, அந்தப் பதவிகளின் பணிகளைப் பார்ப்பதற்காக நான்கு புதியவர்களை நியமித்துள்ளது.
அதன்படி அனுராதபுரம் மாவட்ட தலைவராக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கம்பஹா மாவட்ட தலைவராக இருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு பதிலாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நியமிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கு பதிலாக மாத்தறை மாவட்ட தலைமைத்துவ பணிகளை கவனிக்க பாராளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், காலி மாவட்ட தலைவராக கடமையாற்றிய ரமேஷ் பத்திரனவுக்கு பதிலாக அந்த மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவு தெரிவித்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ரணிலிடம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாகரவிடமிருந்து கடிதம்
பொதுஜன பெரமுனவின் கருத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான அரசியல் பீடத்தின் தீர்மானம் அனைத்து பாராளுமன்ற பிரதிநிதிகள், முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதற்கும், மற்றுமொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் அண்மையில் கூடிய பொலிட்பீரோ தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானம் அரசியல் குழுவில் அங்கம் வகிக்காத உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா, சாகர காரியவசத்தின் தீர்மானங்கள் எவ்வாறாயினும், நாட்டு மக்களின் நலனுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.