செல்ஃபி எடுத்தபோது பள்ளத்தாக்கில் தவறி விழுந்த பெண் மீட்பு.
மலையேற்றத்தின்போது தற்படம் (செல்ஃபி) எடுத்த பெண் 60 அடி ஆழப் பள்ளத்தாக்கில் தவறி விழுந்தார்.
இச்சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், சத்தாரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நிகழ்ந்தது.
புனேயைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக எட்டுப் பேர் குழு அப்பகுதியில் மலையேற்றம் சென்றனர்.
அவர்கள் தோசேகர் அருவிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கனமழை காரணமாக அருவிக்கு அருகே செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து, அருகிலிருந்த போரானே காட் பகுதிக்கு அவர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர்களில் ஒருவரான நஸ்ரீன், 29, கால் தவறி, 60 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அபிஜீத் மண்டாவே என்ற உள்ளூர்க் காவலரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து, அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர்.
பின்னர் நஸ்ரீன், சத்தாராவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்ற மாதம் மகாராஷ்டிராவின் ராய்காட் அருகே உள்ள கும்பே அருவியில் படம்பிடித்துக்கொண்டிருந்தபோது ஆன்வி கம்தார், 26, என்ற பயண ஆர்வலர் 300 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து மாண்டது நினைவுகூரத்தக்கது.