கைதாகியுள்ள வைத்தியர் அர்சுனாவுக்கு பிணை மனு நிராகரிப்பு : 7ம் திகதிவரை விளக்கமறியல்

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து , முரண்பாட்டில் ஈடுபட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்சுனாவை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (5) உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை (5) நகர்தல் பத்திரம் ஊடாக வைத்தியர் அர்சுனாவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான்   உத்தரவிட்டார்.

மேலும்,வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி, வைத்தியருடன் நுழைந்து காணொளிப் பதிவுகளை மேற்கொண்ட இரண்டு நபர்களையும் விசாரணைக்குட்படுத்துமாறு  நீதவான் பொலிஸாருக்கு  உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள்  பணியாற்றிய  வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன், வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதியின்றி புகைப்படங்கள், வீடியோ எடுத்தமை தொடர்பில் மன்னார் பொலிஸில், வைத்தியர் அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைத்தியர் அர்சுனா கடந்த சனிக்கிழமை, மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது , குறித்த வைத்தியரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (5) சட்டத்தரணிகள் ஊடாக வைத்தியருக்கு பிணை மனுவை , மன்றில் விண்ணப்பம் செய்த போதும், குறித்த மனு நிராகரிக்கப்பட்டு, தொடர்ந்து வைத்தியரை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

– ரோகினி நிஷாந்தன்

Leave A Reply

Your email address will not be published.