பதவி விலகிய ஷேக் ஹசினா அகர்தலாவில் வந்திறங்கினார் (video)
பங்ளாதேஷில் ஷேக் ஹசினாவின் 15 ஆண்டுகால ஆட்சி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) ஒரு முடிவுக்கு வந்தது.
மக்களின் கொந்தளிப்பு அதிகமானதைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசினா விலகினார். 76 வயதான அவர், பதவி விலகிய கையோடு பங்ளாதேஷில் இருந்து தப்பி திரிபுராவுக்கு தப்பி வந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் அவர் தஞ்சம் புகுந்துள்ளதாக சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சி தெரிவித்தது. ஆனால் அவர் லண்டன் செல்லவுள்ளதாக கடைசியாக வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டாக்காவில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர், வடகிழக்கு இந்திய நகரான அகர்தலாவில் வந்திறங்கியதாகவும் அது கூறியது.
ஷேக் ஹசினா நாட்டைவிட்டுச் சென்றதை ராணுவத் தளபதி வாக்கர்-உஸ்-ஸமான் உறுதிப்படுத்தினார். தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்றார்.
“நாட்டின் முழுப்பொறுப்பையும் நான் ஏற்கிறேன்,” என்று அவர் கூறினார். இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக யார் இருப்பார் என்பது பற்றிய தகவல் இல்லை.
ஷேக் ஹசினா பதவி விலகியதை மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். அவரது படத்தைச் சிலர் சிதைத்தனர்.
ஷேக் ஹசினாவின் அரசாங்கத்தை எதிர்த்து ஜூலை மாதம் முதல் பங்ளாதேஷில் கடுமையான போராட்டம் நடைபெற்றது. அரசாங்க வேலையில் பாரபட்சமான ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்களும் இளையர்களும் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.
போராட்டத்தை ஒடுக்க அரசாங்கம் ராணுவத்தை ஏவியது. சென்ற மாதம் தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தபட்சம் 300 பேருக்கு மேல் பலியானார்கள்.
ஒருசில நாள்கள் அமைதி நிலவிய பின்னர் ஆகஸ்ட் 4ஆம் தேதி அங்கு போராட்டம் வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசினா விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் போராட்டக் களத்தில் இறங்கினர்.
அதற்கு எதிராக அரசாங்க ஆதரவாளர்கள் களமிறங்கியதைத் தொடர்ந்து ரத்தக்களறி ஏற்பட்டது. இருதரப்பினரும் தடிகளாலும் கத்திகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கியதில் தலைநகரம் போர்க்களமாகக் காட்சியளித்தது.
கலவரத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அன்று மட்டும் 94 பேர் உயிரிழந்தனர். 14 காவல்துறை அதிகாரிகளும் அவர்களுள் அடங்குவர்.
அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆயினும், அந்த உத்தரவை மீறி திங்கட்கிழமையும் மக்கள் பெரும் கொந்தளிப்புடன் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
தலைநகர் டாக்காவில் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் நோக்கி அவர்கள் படையெடுத்துச் சென்றதால் பதற்றம் அதிகரித்தது. ஏறத்தாழ 400,000 பேர் ஒன்றுதிரண்டு சென்றதாக ஓர் ஊடகச் செய்தி கூறியது.