கடினமாக நேரத்தில் கேரள மக்களுக்கு துணை நிற்பதாக அறிவித்துள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை
வயநாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலசசரிவால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்ததோடு, ஏராளமான மக்களும் உயிரிழந்தனர். அத்துடன், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை உடனடி நிவாரணங்களை அறிவித்துள்ளது.
கேரள மாநில அதிகாரிகளுடன் ரிலையன்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. முகாம்களில் இருக்கும் மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை பேரிடர் மேலாண்மை குழு அரசுடன் இணைந்து வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் முதல் மறுகட்டமைப்பு வரை அனைத்துவிதமான உதவிகளையும் இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் செய்ய இருப்பதாகவும், இதற்காக மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து, அத்தியாவசிய ஊட்டச்சத்து உணவுகளான பால், பழங்கள் உள்ளிட்டவற்றை சில வாரங்கள் அல்லது மாதங்கள் வரை வழங்க ரிலையன்ஸ் அறக்கட்டளை உறுதி பூண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கேரளாவில் நடந்த வரலாறு காணாத நிலச்சரிவால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்திருப்பதாக கூறியுள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நிடா அம்பானி, பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் இனி இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படாத வகையில், அரசு அதிகாரிகளுடன் இணைந்து நிரந்தர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உதவிகள்
1. அத்தியாவசிய உணவுகள், ஊட்டச்சத்து மிகுந்த பழங்கள், உண்ணத் தயாராக உள்ள உணவுகளை வழங்குதல். அத்துடன் பால், உலர் பழங்கள், சமையலறை பாத்திரங்கள், அடுப்புகள்.
2.சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள். அத்துடன் மக்களுக்கு அன்றாடம் தேவையான சோப்பு, பற்பறை உள்ளிட்ட பொருட்கள்.
3. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள், சூரிய ஒளி விளக்குகள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள்.
4. விவசாயிகள் மீண்டும் தங்களது பணிகளை தொடங்கும் வகையில் விதைகள், தீவனம், விவசாயக் கருவிகள் உள்ளிட்ட பொருட்கள். விவசாயத்தில் மீண்டும் கவனம் செலுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த பயிற்சிகள்.
5. மாணவ, மாணவிகள் மீண்டும் கல்வியைத் தொடரும் வகையில் புத்தகங்கள், எழுதுப் பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள்.
6. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தொலைதொடர்பு வசதியில் சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருக்கும் வகையில், ஜியோ பிரத்யேக செல்போன் டவர்கள். அத்துடன், மீட்புப் பணியாளர்களுக்கு ஜியோ பாரத் செல்போன்.
7. நிலச்சரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள், குணமடைய தேவையான உதவிகள்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை குழுவினர் ஏற்கனவே நிவாரணத்திற்காக களத்தில் பணியாற்றி வருவதால், மாநில அதிகாரிகளுடன் இணைந்து திட்டமிட்டு, மேற்கண்ட அனைத்து உதவிகளையும் படிப்படியாக வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வலியுடன் இருக்கும் வயநாடு மக்கள் மீண்டும் செழிப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளும் வகையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவும் என்றும் உறுதியளித்துள்ளது.