காணாமல் போன தெமட்டகொட புகையிரத தொழிலாளியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
காணாமல் போன தெமட்டகொட புகையிரத ஊழியரின் சடலம் பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (06) அதிகாலை 1.30 மணியளவில் காணாமல் போயிருந்த , தெமட்டகொட புகையிரத தளத்தில் பணிபுரிந்த நாயக்ககே சுஜீவ குமார என்ற தொழில்நுட்பவியலாளர் மாத்தறையைச் சேர்ந்த 47 வயதுடையவர்.
இவருடன் பணிபுரியும் ஏனையவர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது தெமட்டகொட புகையிரத நிலையத்தில் உள்ள கிணறு ஒன்றிற்கு அருகில் அவரது என சந்தேகிக்கப்படும் பணப்பை, கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு ஜோடி காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தெமட்டகொட பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் மரைன் பிரிவின் நீர்மூழ்கிக் குழுவினர் நேற்று இரவு கிணற்றில் தேடிய போதும் அவரது சடலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் ரயில்வே அதிகாரிகளும் பொலிஸாரும் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து தெமட்டகொட புகையிரத நிலைய ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலைமையினால் புகையிரத பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதோடு, தொடரூந்து ஊழியர்களின் வழமையான வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பயணிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பெரிதும் சிரமப்பட்டனர்.
இந்த வேலை நிறுத்தத்தின் பின்னணியில், காணாமல் போன நபரின் பணப்பை மற்றும் ஏனைய பொருட்கள் கிடைத்த கிணறு மற்றும் அருகில் உள்ள மற்றுமொரு கிணற்றை கடற்படையினர் இன்று காலை சோதனையிட்டனர்.
தேடுதல் நடவடிக்கையின் போது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.