கனவைத் துரத்தினால் நிச்சயம் நிறைவேறும்: ‘தங்கலான்’ விக்ரம்.
ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி நமது எண்ணம் இருந்தது எனில், நிச்சயம் நம்மால் அதனை எளிதில் எட்டிப் பிடிக்கமுடியும் என்று சொல்கிறார் நடிகர் விக்ரம்.
‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் விக்ரம், பல சுவாரசியமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
‘அந்நியன்’, ‘பிதா மகன்’, ‘சேது’, ‘ஐ’, ‘ராவணன்’ போன்ற அனைத்துப் படங்களிலும் எவ்வளவு சிரமப்பட்டு நடித்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ‘தங்கலான்’ படத்தோடு ஒப்பிட்டால் அந்தப் படங்களுக்கெல்லாம் 8% கூட சிரமப்படவில்லை என்று கூறியுள்ளார்.
பலரும் என்னிடம், ஏன் இந்தப் பாத்திரத்தை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டனர். அப்போது அவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. பின்னர் யோசித்துப் பார்த்தபோதுதான், ‘தங்கலான்’ எனக்குள் இருப்பதை உணர்ந்தேன்.
நான் எப்படி நடிக்கவேண்டும் என்ற இலக்குடன் சிறு வயது முதல் முயற்சி செய்தேனோ, அப்படித்தான் ‘தங்கலான்’ தன் இலக்கை நோக்கிச் செல்கிறான்.
கல்லூரியில் படித்தபோது ஒரு விபத்தில் என் கால் உடைந்தது. மூன்று ஆண்டு களாக நடக்கவில்லை. அதன்பின்னர் ஓராண்டுக்காலம் ஊன்றுகோலைப் பிடித்தபடி நடந்தேன். அப்போதும் நான் நடிக்கவேண்டும் எனக் கூறிக்கொண்டே இருப்பேன். ஆரம்பத்தில் 750 ரூபாய்தான் சம்பளம் கிடைக்கும். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும், படம் எதுவும் ஓடாததால், நடிப்பை விட்டுவிடும்படி கூறினார்கள்.
அன்றைக்கு சினிமாவை விட்டிருந்தால், இன்றைக்கு இந்த மேடையில் நின்றிருக்கமுடியாது. உங்களது இலக்கை, கனவைத் துரத்தி ஓடினால் கண்டிப்பாக அது நிறைவேறும் என்று பேசியுள்ளார் விக்ரம்.
பா. ரஞ்சித் மிகப்பெரிய ராணுவத்தை தன் பின்னால் வைத்துள்ளதாக நடிகை மாளவிகா மோகனன் குறிப்பிட்டார். இந்த மேடையில் சண்டையிட விரும்பினால் யாரிடம் சண்டையிடுவீர்கள் என்று மாளவிகாவிடம் கேட்டபோது, நடிகர் விக்ரமுடன் சண்டையிட விரும்புவதாகக் கூறினார்.
தொடர்ந்து அவர் மேடையில் நடிகை பார்வதிக்கு சிலம்பம் சுற்ற கற்றுக்கொடுத்தார். அதன்பிறகு இருவரும் அடுத்தடுத்து மேடையில் சிலம்பம் சுற்றியதைப் பார்த்து ரசிகர்கள் வியந்து போனார்கள்.
படத்தில் ஒரு சூனியக்காரி காதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்புக்கான ஒத்திகையின்போது, ஜாக்கெட் அணியாமல் சேலை மட்டும் அணிந்து நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். நானும் ஸ்டூடியோவில் சிலர் மட்டுமே இருந்ததால் அதுபோலவே நடித்தேன். ஆனால் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றபிறகுதான் வெட்டவெளியில் பல பெண்கள் சட்டை அணியாமல் சேலை மட்டுமே கட்டிக்கொண்டு நடித்தனர்.
அவர்களைப் பார்த்தபோது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இன்னொரு பக்கம் ஆண்கள் எல்லாம் மிகவும் குறைந்தளவிலான ஆடையுடன் ஆதிவாசி வேடத்தில் இருந்தனர். முக்கியமாக விக்ரமைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். ‘தங்கலான்’ படத்தில் நடித்த அனுபவம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று எனத் தெரிவித்துள்ளார் மாளவிகா மோகனன்.