போலி அஸ்தியைக் கொடுத்து ஏமாற்றி வந்த ஈமச் சடங்குச் சேவை நிலையம் : அபராதம் $950 மில்லியன்.
அமெரிக்காவில் இறந்த 190 பேரின் அழுகிய சடலங்களை வைத்திருந்த ஈமச் சடங்குச் சேவை நிலையத்துக்கு 950 மில்லியன் அமெரிக்க டாலர்
(1,261,068,000 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொலராடோ (Colorado) மாநிலத்தில் உள்ள The Return to Nature எனும் அந்த நிலையம் மாண்டவர்களின் குடும்பங்களுக்குப் போலி அஸ்தியைக் கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நிலையத்தின் உரிமையாளர்கள் ஜோன், கேரி ஹால்ஃபோர்ட் (Jon, Carie Hallford) என்று BBC செய்தி குறிப்பிடுகிறது.
நிலையத்தில் இருந்து மோசமான வாடை வீசுவதாக எழுந்த புகார்களை அடுத்து அவர்களது குற்றம் அம்பலமானது.
இறந்தவர்களின் உடலுறுப்புகளைத் தவறான முறையில் பதுக்கி வைக்க ஜோன் ஹால்ஃபோர்ட் முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வழக்கின்போது அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை.
கடும் பண நெருக்கடியில் இருப்பதால் விதிக்கப்பட்ட அபராதத்தையும் செலுத்தவில்லை
இதனால் ஹாஸ்ஃபோர்ட் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி ஜோன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர்களுக்கு எதிரான வழக்கில் 100க்கும் அதிகமான குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
சடலங்களைத் தவறாகக் கையாண்டது, திருட்டு, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, ஏமாற்று வேலை என இன்னும் நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகளையும் ஹால்ஃபோர்ட் தம்பதி எதிர்நோக்குகின்றனர்.
அமெரிக்காவில் இறந்தவர்களின் உடல் 24 மணி நேரத்தில் தகனம் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் பதப்படுத்தி வைக்கப்பட வேண்டும்.