வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை : வரவேற்க மன்னாரில் மக்கள் வெள்ளம்

மன்னார் பொது வைத்தியசாலையில் பாதிப்படைந்த ஒரு இளம் தாயின் குடும்பத்துக்காக நீதி கோருமுகமாக மன்னார் வைத்தியசாலைக்கு அத்துமீறிச் சென்றார் என வைத்தியர் அர்ச்சுனா மீது இரு குற்றங்கள் சாட்டப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை (3) கைது செய்யப்பட்டு,விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை (02) இரவு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அவர்கள்  மன்னார் பொது வைத்தியசாலையில் அநியாயமாக மரணித்த இளம் தாயின் சம்பவத்தை அறிந்து கொள்வதற்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.

அங்கு இவர் நடந்து கொண்ட விதம் தொடர்பாக மன்னார் பொது வைத்தியசாலையின் நிர்வாகத்தால் மன்னார் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து மன்னார் பொலிசார் வைத்தியர் அர்ச்சுனா மீது இரு குற்றங்கள் சாட்டப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை (03) கைது செய்து மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன் முன்னிலைப் படுத்தியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் புதன் கிழமை (07) வரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதிபதியால் கட்டளை பிறப்பிக்கப் பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (05) சிரேஷ்ட சட்டத்தரணி புனிதநாயகம் தலைமையில் வைத்தியர் அர்ச்சனாவின் விடுதலைக்காக மன்னார் நீதிமன்றில் நகர்த்தல் படிவம் சமர்பிக்கப்பட்டிருந்தது.

இதன்போது வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பல சட்டத்தரணிகள் ஆஜராகி பிணை மனுவை நிராகரிக்க கோரியிருந்ததன் காரணமாக அன்று இந்த பிணை மனு நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

ஏற்கனவே குறிப்பிட்டதற்கு இணங்க புதன் கிழமை (07) வைத்தியர் அர்ச்சுனா மன்னார் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது வைத்தியருக்கு சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி தலைமையில் முன்னைய விட மன்னார் . வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களிருந்த வருகை தந்திருந்த அதிகமான சட்டத்தரணிகள் வழக்கில் முன்னிலையாகி இருந்தனர்.

அதேநேரத்தில் இம்முறை வைத்தியரின் வழக்கில் இவருக்கு எதிராக கடந்த முறையை விட குறைவான சட்டத்தரணிகளே முன்னிலையாகி இருந்தனர்.

இந்த வழக்கில் வைத்தியர் அர்ச்சுனா ஐம்பராயிரம் ரூபா பெறுமதியான இருவரின் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவ்வழக்கு எதிர்வரும் 21ந் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனா சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் சட்டத்தரணிகளான,அந்தோனி மடுத்தீன் , செ.டினேஷ் , கணேஷ் , வவுனியா சிரேஷ்ட சட்டத்தரணி லோயிஸ் குரூஸ் , த.வினோதன் . கமல்ராஜ் , போல் , திருமதி புராதினி . சுதர்சனா . சுலக்சினி , டிலெக்சி , கௌசலியா ஆகியோர் முன்னிலையாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் இன்று (07) பிணையில் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கையில் பெருந்தொகையான மக்கள் மன்னார் மற்றும் வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள் நீண்ட நேரம் மன்றுக்கு வெளியேயும் வாகனத் தரிப்பிடத்திலும் காத்திருந்தனர்.

நீதிமன்றுக்கு முன்னால் மக்கள் வெள்ளம் அர்ச்சுனாவை வரவேற்க காத்திருந்த நிலையில் நீதிமன்றுக்கு முன்னால் குந்தகம் ஏற்படாதிருக்கும் நோக்குடன் பிணையில் விடுதலையான வைத்தியரை நீதிமன்ற வளாகத்தின் முன்வாயிலால் அழைத்து வராது பின்வாயிலால் அவரின் சட்டத்தரணிகளால் அழைத்துச் செல்லப்பட்டதால் மக்கள் ஏமாற்றமடைந்த நிலையில் இவர் மன்னார் பொது விளையாட்டு மைதானதத்தில் மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ரோகினிநிஷாந்தன்

 

 

Leave A Reply

Your email address will not be published.