’20’ அமுலானால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறி! : சட்டத்தரணி கோசலை மதன்

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி சட்டத்தை மீறி தன்னிச்சையான முடிவுகளை எடுத்து செயற்படக்கூடிய தன்மை காணப்படுவதால் நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குள்ளாகும்.”
– இவ்வாறு யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர் சட்டத்தரணி திருமதி கோசலை மதன் தெரிவித்தார்.
‘அரசமைப்பின் 20ஆவது திருத்தம்’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வரங்கில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஓர் அரசு ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும் என்றால் சில கட்டுப்பாடுகள், விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக மத்தியின் கையில் மட்டும் ஆட்சி அதிகாரங்கள் குவியக் கூடாது என்பதற்காக மாகாண சபை முறைமை 13 ஆவது திருத்தச் சட்டமாகக் கொண்டுவரப்பட்டது. இதனால் மாகாண சபைகள் ஊடாக சில விடயங்கள் செய்யக் கூடியதாக இருந்தது. அதேபோல் 19 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் உயர் அதிகாரிகள், உயர் பதவிகளில் வகிப்பவர்களை ஆணைக்குழுக்கள் கண்காணித்ததுடன் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. குறிப்பாக 19 ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதியின் அதிகாரங்களை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்தது. தற்போது அரசு 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் உள்ள சாதக – பாதக விளைவுகளை நாம் விரிவாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
முதலில் நாம் 19, 20 ஆகிய இரு திருத்தங்களிலும் இடம்பெறும் விடயங்களைப் பார்த்தால் மூன்று முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன. ஜனாதிபதி, நாடாளுமன்றம் ஆகியவற்றின் கால எல்லை ஐந்து வருடங்கள் என்ற விடயம் உள்ளது. ஜனாதிபதி இரண்டு தடவைக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியாது, தகவல் அறியும் உரிமை ஆகிய மூன்று விடயங்களும் இந்த இரு திருத்தங்களிலும் காணப்படுகின்றன. இது ஓரளவு வரவேற்கத்தக்கது. எனினும், 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள முக்கிய பல விடயங்கள் 20 ஆவது திருத்தச் சட்டத்தில் இல்லை.
குறிப்பாக 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் அரசமைப்பு பேரவை நீக்கப்பட்டு நாடாளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. சிலர் அரசமைப்பு பேரவையைச் சட்டவிரோதமானது என்று கருதுகின்றனர். 20 ஆவது சட்ட வரைவின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கின்றன. தனி நபராக அதிகாரத்தில் செயற்படக்கூடிய தன்மை காணப்படுகின்றது. சில ஆணைக்குழுக்கள் நீக்கப்படுகின்றன. குறிப்பாக கணக்காய்வு சேவை, பெறுகைக்கான ஆணைக்குழு நீக்கப்படுகின்றன. இவை நீக்கப்படுவதால் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை அற்ற நிலை காணாப்படும். அப்படியாயின் ஜனாதிபதி தாம் நினைத்தவாறு தன்னிச்சையாகச் செயற்படக் கூடிய நிலைமை இருக்கும்.
19ஆவது திருத்தச் சட்டம் ஊடாக ஜனாதிபதி பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியாது. ஆனால், 20 ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதி தனது கடிதம் ஒன்றின் ஊடாகவே பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். பிரதமரை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. இது ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் ஒருபடி உயர்த்துகின்றது. இதன் ஊடாக அமைச்சரவையை ஜனாதிபதி நியமிக்கும் நிலைமை காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது அமைச்சரவையின் எண்ணிக்கையைக்கூட அவர் தீர்மானிக்க முடியும். நாடாமன்றத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட அமைச்சர் அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள முடியும்.
அமைச்சரவையை நியமிக்கப் பிரதமருடன் கலந்துரையாட வேண்டிய தேவை 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இருந்தது. ஆனால், 20 ஆவது திருத்தம் ஊடாகப் பிரதமருடன் பேசாமல் தாம் நினைத்தவாறு அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதியால் முடியும். பிரதமரைக் கேட்காமல் எத்தனை பேரையும் அமைச்சாராக நியமிக்க முடியும். குறிப்பாகச் சொல்லப்போனால் அமைச்சரவை ஜனாதிபதியின் பூரண கட்டுப்பாட்டிலேயே இருக்கும். நாடாளுமன்றத்தில் அதிகளவானவர்கள் அமைச்சர்களாக வந்தால் நாடாளுமன்றத்தின் சுயாதீனத் தன்மை கேள்விக்குறியாகும். இது மிகவும் ஆபத்தான ஒன்று.
20ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி ஒரு வருடத்திலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். இது தேவையற்ற செலவுகளையும் பொதுச் சொத்துக்களின் பயன்பாட்டையும் உருவாக்கும். மேலும், இந்தத் திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி பதவி வகிக்கும்போது அவர் மீது குற்றவியல், குடியியல் சார்ந்த வழக்குகளைத் தொடர்ந்து நடத்த முடியாத ஏற்பாடுகளும் உள்ளன. அதாவது அவர் மீது ஆட்சிக்கு வர முன்னர் இருந்த வழக்குகளை அவர் பதவி வகிக்கும்போது தொடர்ந்து முன்னகர்த்த முடியாது. இதனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த அடிப்படை உரிமை மீறல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்கூடக் கிடைக்காமல் போகலாம்” – என்றார்.