பத்மஸ்ரீ விருது பெற்றவர் கைது.

முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக பத்மஸ்ரீ விருதுபெற்ற கேரள ஆடவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் சி.மேனன் என்பவர் ஹீவான் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
தமது நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகளில் இருமடங்கு பணத்தைத் தருவதாக பொதுமக்களிடம் அவர் ஆசை வார்த்தை கூறினார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட ஏராளமானோர், அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இந்நிலையில், முதிர்வு காலம் முடிந்தும் முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பித் தராமல் மேனன் ஏமாற்றினார்.
இவ்வாறு 62 பேரிடம் 7. 78 கோடி ரூபாயை அவர் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. ஏமாந்தோர் அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன.
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது கடந்த 2016ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. சுந்தர் சி.மேனன் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்தத் தகவலை மறைத்து அவர் விருது பெற்றதாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே பொதுநலன் மனுவை சிலர் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.