ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காங்கிரஸ் இளையரணி நிர்வாகி கைது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் திருவேங்கடம் என்பவர் காவல்துறையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பலதரப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வகையில், காவலில் வைக்கப்பட்டுள்ள அருள் கொடுத்த தகவலின்படி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இளையர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச்செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, அதில் அஸ்வத்தாமனின் தந்தை ரவுடி நாகேந்திரன் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நாகேந்திரனுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் முன்விரோதம் இருந்ததைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. சென்னை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலிலும் வழக்கறிஞரான அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரசிலிருந்து நீக்கம்
இந்நிலையில், கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக அஸ்வத்தாமன் செயல்பட்டதால் அவரை நீக்கிவிட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக இளையர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு இளையர் காங்கிரஸ் கட்சியின் முதன்மைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து என்.அஸ்வத்தாமன் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார் என்பதை தமிழ்நாடு இளையர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

“காங்கிரஸ் கட்சியின் மதிப்புக்கும் கொள்கைகளுக்கும் முரணாகச் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இளையர் காங்கிரஸ், ஒருமைப்பாடு மற்றும் ஒழுக்கத்தைப் பேணுவதில் உறுதியாக உள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக, திமுக, தமாகா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.