மனைவியினது வாயில் வெடிகுண்டை வைத்துக் கொன்ற சந்தேகத்தில் கணவர் கைது.
தன் மனைவியின் வாயில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து, அவரைக் கொன்றதாகக் கூறி, ஆடவர் ஒருவர் தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆயினும், வடக்கு மாநிலமான மே ஹாங் சோனைச் சேர்ந்த யோன் என்ற 54 வயது ஆடவர், தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளதாகத் தாய்லாந்து செய்தி ஊடகமான ‘தாய்கர்’ தெரிவித்துள்ளது.
லுவென் என்ற 53 வயதுப் பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரிப்பதற்காக, ஆகஸ்ட் 6ஆம் தேதி அவரது வீட்டிற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அதற்கு முதல்நாள் இரவு அவர் மாண்டுபோனதாகச் சொல்லப்படுகிறது.
காவல்துறையினர் அங்குச் சென்று பார்த்தபோது லுவெனின் தலைமுழுதும் இரத்தம் தோய்ந்திருந்தது. அவருடைய வாய், முகம் முழுவதும் கடுமையான காயங்கள் காணப்பட்டன. படுக்கையறை தரையில் அவரது பற்கள் சிதறிக் கிடந்தன. அவ்விடத்தில் ‘பிங் பாங்’ குண்டுச் சிதறல்களும் பயன்படுத்தப்படாத, மேசைப்பந்து அளவிலான ‘பிங் பாங்’ குண்டுகளும் காணப்பட்டன.
யோன் நள்ளிரவுப் பொழுதில், ஒரு சமூகத் தலைவரை அழைத்து தன் மனைவியின் மரணத்தைப் பற்றிக் கூறியுள்ளார். தான் எழுந்து பார்த்தபோது, தன் மனைவி இறந்து கிடந்ததாக அவர் சொன்னார்.
நள்ளிரவு என்பதால் அந்தச் சமூகத் தலைவர் அதுபற்றி உடனடியாகக் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை.
தன் தாயைக் கொன்றது தன் தந்தைதான் என்று கண்ணீருடன் கூறினார் அவர்களின் 24 வயது மகள்.
பொறாமைக்கார யோன், குடித்துவிட்டு வந்து தன் மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவார் என்றும் அவர் தன் மனைவியை வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார் என்றும் உள்ளூர்வாசிகள் கூறியதாக ‘வோர்ல்டு ஜர்னல்’ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தன் மனைவியுடன் ஒரே அறையில் உறங்கியபோதும் தனக்கு வெடிச்சத்தம் எதுவும் கேட்கவில்லை என்று யோன் சொன்னதாகவும் அச்செய்தி கூறுகிறது.
உடற்கூறாய்விற்காக லுவெனின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பில் கூடுதல் சான்றுகளைத் திரட்டும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.