எடை கூடியதால் ஒலிம்பிக் பதக்கத்தை இழந்த இந்திய வீராங்கனை

இந்திய வீராங்கனை விநேஷ் போகாட் (Vinesh Phogat) ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

50 கிலோகிராம் எடைப் பிரிவின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்த அவர் 50 கிலோ எடையை மிஞ்சியதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் சொன்னது.

அவரது எடை 150 கிராம் அதிகமாக இருந்தது.

பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை அவர் வென்று கொடுப்பார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

எடையை 50 கிலோகிராமுக்குக் குறைக்க போகாட்டும் அவருடைய பயிற்றுவிப்பாளர்களும் இரவு முழுதும் போராடினர்.

போகாட் தூங்காமல் இரவு முழுதும் உடற்பயிற்சியில் ஈடுபட்டார்….எடை குறையவில்லை.

முடியை வெட்டியாவது எடை குறையுமா என்று எண்ணிய பயிற்றுவிப்பாளர்கள் அதையும் செய்து பார்த்தனர்…எடை குறையவில்லை என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.

போட்டியிலிருந்து நீக்கப்பட்ட சிறிது நேரத்தில் போகாட் நீர்ச்சத்துக் குறைவால் மயங்கி விழுந்தார்.

அவரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டியிருந்ததாக India Today செய்தி நிறுவனம் சொன்னது.

இந்நிலையில் போகாட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டது இந்தியாவுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இணையவாசிகள் பலர் அவரை மனம் தளராமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவரை ஊக்குவிக்கும் வகையில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவரை ‘தேசத்தின் பெருமை’ என்று வருணித்தார்.

Leave A Reply

Your email address will not be published.