காலி வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றிலிருந்து கார் ஒன்றுக்கு மாற்றிய துப்பாக்கி : வேகமாக இயங்கிய ஜனாதிபதியின் பாதுகாப்பாளர்கள்

மறைந்த கங்காராம விகாராதிபதி வண. கலகொட ஞானிசார தேரருக்கான இறுதி சடங்கின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுதாப பேச்சை செய்து கொண்டிருந்தார். திடீரென ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புப் பிரிவினர் விரைவாக ஜனாதிபதியின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

இறுதி சடங்கில் கலந்து கொண்டிருந்த அனைவரும் இந்த திடீர் மாற்றத்தை உணர்ந்தனர். ஆனால் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. தகவலறிந்த அதிகாரிகளும் எதுவும் பேசாமல் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இதற்கு காரணம் புலனாய்வுப் பிரிவிலிருந்து வந்த அவசர செய்தியாகும். அந்த செய்தி என்னவென்றால், காலி வீதியில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் , கார் ஒன்றுக்கு துப்பாக்கி ஒன்றை கொடுத்துள்ளார் என்பதாகும். தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில், பகல் பொழுதில் கொழும்பு நகர மத்தியில் துப்பாக்கி கைமாற்றப்பட்டது குறித்த செய்தி ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரை அதிர்ச்சியடைய வைத்தது.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் அனுபவமும் கொண்ட பாதுகாப்புப் பிரிவினரின் கவனம் உடனடியாக கங்காராமயில் நடைபெறும் திறந்தவெளி நிகழ்ச்சியின் போது ஜனாதிபதியை இலக்கு வைத்து ஏதேனும் குற்றச்செயல் திட்டமிடப்பட்டுள்ளதா என்பதில் குவிந்தது.

எவ்வாறாயினும், புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் காரின் பதிவு எண்களும் உடனடியாக கிடைத்திருந்தன.

விரைவாக செயல்பட்ட குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆகியவை வாகன எண் தகடு விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் யாருடையவை என்பதை ஆராய்ந்தன. அப்போது வெளிப்பட்ட தகவல்கள் அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தின.

சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாதுகாப்புப் பிரிவுடன் தொடர்புடைய ஒரு முக்கியஸ்தரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது, அதேவேளை கார் ஒரு முக்கிய அரசியல்வாதியின் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணைகளில் , கங்காராம விகாராதிபதியின் இறுதி சடங்கிற்கு சம்பந்தப்பட்ட அரசியல் முக்கியஸ்தரும் வந்திருந்தார், அவரது பாதுகாவலர் ஒருவர் மறந்து விட்டுச் சென்ற துப்பாக்கியை மோட்டார் சைக்கிளில் வந்து , வீதியில் வைத்து இவ்வாறு கொடுத்துள்ளார் என்பதாகும்.

துப்பாக்கியைக் கொண்டு வந்து கொடுப்பதில் தவறு இல்லை என்றாலும், அதைக் கொடுக்கும் முறையில் காட்டப்பட்ட முறைகேடு காரணமாக வீண் குழப்பம் ஏற்பட்டது என தகவல் தெரிவித்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.

Leave A Reply

Your email address will not be published.