அரகலய போராட்டம் இளைய தலைமைத்துவத்தை கோரியது. அந்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம் : மஹிந்த ராஜபக்க்ஷ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தமது கட்சியில் இருந்து பிரிந்த எம்.பி.க்கள் குழுவை, சில சித்தாந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தாய்நாட்டின் மற்றும் கட்சியின் வெற்றிக்காக மீண்டும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். கடந்த காலங்களைப் போன்று இணைந்து செயற்பட முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
“நாங்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். நான் அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறேன். 1970 ஆம் ஆண்டு நான் அரசியலில் கலந்துகொண்டேன். என் அரசியல் அனுபவத்தின் அடிப்படையில், இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். வெற்றி பெறுவோம் என்று கூறியபோது, அதை பற்றி மகிழ்ச்சி அடையலாம். வேட்பாளர்கள் இருக்கிறார்கள். நாமல் ராஜபக்ச அதைவிட சக்திவாய்ந்தவர்.
பொஹொட்டுவாவிலிருந்து சென்ற நாடாளுமன்ற குழுவை மீண்டும் வருமாறு அழைக்கிறோம். சிலர் கண்டிப்பாக வருவார்கள்.
பொஹொட்டுவாவிலிருந்து சென்றவர்களை நாங்கள் அழைக்கிறோம் எங்களுடன் சேர்ந்து செயல்பட அழைக்கிறோம்.
பொஹொட்டுவாவை நேசிக்கும் மக்கள் நாமல் ராஜபக்சவை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். நாட்டின் இளைஞர்கள் இளைஞர் தலைமைத்துவத்துடன் பயணிப்பார்கள். அவர்கள் உதவ வேண்டும். வேலை செய்ய வேண்டும். அது அவர்களின் பொறுப்பு. அரகலய போராட்டம் இந்த நாட்டிற்கு இளைஞர் தலைமைத்துவத்தை கோரியது. இப்போது நாங்கள் அந்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம். நெருக்கமாக இருந்த சிலர் எங்களிடமிருந்து பிரிந்து செல்வதைப் பற்றி வருத்தம் உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அரசியலின் இயல்பு அப்படியே. வருகின்றது, செல்கிறது. ஆனால் நான் மாறவில்லை.”