மாகாண சபைத் தேர்தல் சட்டம் மீது செப். 3 ஆம் திகதி இறுதி வாசிப்பு!
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக, பழைய மாகாண சபைத் தேர்தல் சட்டங்களை மீள நடைமுறைக்குக் கொண்டு வரும் நோக்கில் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலம் எதிர்வரும் மூன்றாம் திகதி நாடாளுமன்றத்தில் இறுதியாக நிறைவேற்றப்படும் எனத் தெரியவருகின்றது
பழைய மாகாண சபைத் தேர்தல் சட்டங்களை அப்படியே மீளக் கொண்டு வருவது தொடர்பான சுமந்திரன் எம்.பியின் தனிநபர் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்காக ஏற்கப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, அந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவது சம்பந்தமாக தனது பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் வழங்கியும் விட்ட நிலையில், அந்தச் சட்டமூலம் அரசு தரப்பினரால் ஒரு வருடத்துக்கு மேல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
எனினும், பின்னர் அரசுத் தரப்புடன் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் கடந்த 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரண்டாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் அச்சட்டமூலம் எடுத்துக்கொள்ளப்பட்டு, விவாதம் இன்றி, வாக்களிப்புக்கு விடப்படாமல், ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இப்போது உயர்நீதிமன்றப் பரிந்துரைகளுக்கு அமைவாக சட்டமூலத்தின் ஏற்பாடுகளைத் திருத்தம் செய்யும் நோக்கோடு, இன்று பிற்பகல் சட்டமூலங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலையியல் குழுவில் அது பரிசீலிக்கப்படுகின்றது.
சட்டமூலத்தில் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தபடியான மாற்றங்கள் இன்று செய்யப்பட்டதும், எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அதனைச் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்தச் சட்டமூலத்தை எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மூன்றாம் வாசிப்புக்காக எடுத்து அங்கீகரித்து, உடனடியாக சட்டமாக்குவதற்கு நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறியவந்துள்ளது.