கிழக்குமைய அரசியல் – சில அவதானங்கள் (1) : சண் தவராஜா
கிழக்குமைய அரசியல் – சில அவதானங்கள் (1)
சுவிசிலிருந்து சண் தவராஜா
கிழக்கிற்கான தனித்துவ அரசியல் தொடர்பாக அண்மைக் காலமாகப் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின்னான சூழ்நிலைகள் இத்தகைய பேச்சுக்களைத் தீவிரப் படுத்தியிருக்கின்றன. அரசியல்வாதிகளையும் தாண்டி, சமூகத்தில் அபிப்பிராயங்களை உருவாக்கக் கூடிய நிலையில் உள்ள அறிவுஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் இத்தகைய கருத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றமையைக் காண முடிகின்றது.
அரசியலிலும் பொதுத் தளத்திலும் கருத்துக்களை வெளிப்படுத்தவும், தாம் சரியென நினைக்கும் கருத்தை ஆதரிக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேபோன்று, பொதுத் தளத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு மாற்றான சிந்தனை கொண்டவர்கள் அல்லது முன்வைக்கப்படும் கருத்துக்களில் பொய்மை மறைந்திருப்பதை அவதானிப்பவர்கள் அதனைச் சுட்டிக் காட்டவும் உரிமை கொண்டவர்கள் என்ற அடிப்படையில் எனது கருத்து அமைகின்றது.
ஈழத் தமிழர்களின் வரலாற்றை உற்று நோக்குபவர்கள் அல்லது வரலாற்று அடிப்படையில் ஆய்வு செய்பவர்கள் ஒரு விடயத்தை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். இன்று தமிழர் தாயகம் என அழைக்கப்படும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்றுமே இணைந்ததான ஒற்றை ஆட்சியின் கீழ் கடந்த காலங்களில் இருந்ததில்லை. இந்த இரண்டு மாகாணங்களும் வரலாற்றில் முதன்முதலாக இணைந்த ஒரு ஆட்சியின் கீழ்க் கொண்டு வரப்பட்டது என்றால் அது 1988 இல் பதவியேற்ற முதலாவது இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் கீழேயே. மிகவும் குறுகிய காலமே ஆட்சியில் இருந்த இந்த மாகாண சபை யனவரி 1, 2007 இல் நீதிமன்ற வழக்கு மூலம் பிரிக்கப்படும் வரை பெயரளவில் இயங்கி வந்தது.
அதேவேளை, கிழக்கிற்கான தனித்த அரசியலை முன்மொழிபவர்கள் கிழக்கு மாகாணம் என்ற – வரலாற்றில் ஒருபோதும் இடம் பிடித்திராத – அலகு கூட முதன் முதலில் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் போதே சட்டபூர்வமாகத் தோற்றம் பெற்றது என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். குடியேற்ற நாடாக இலங்கைத் தீவு இருந்தவேளை ஆங்கிலேயர்களே தமது நிர்வாகத் தேவைகளுக்காக இலங்கையை 9 மாகாணங்களாகப் பிரித்திருந்தார்கள். இந்தப் பிரிவினை வெறும் நிர்வாக அடிப்படையிலானதே அன்றி வேறு கருதுகோள்களின் அடிப்படையில் ஆனது அல்ல என்பதை நினைவில் நிறுத்துவது நல்லது.
கிழக்கிற்கான தனித்த தலைமை தொடர்பாகக் காலங்காலமாகப் பேசப்பட்டு வந்தாலும் கூட 2004 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து சென்ற போதிலே முதன்முதலாகக் கிழக்கிற்கான தனித்துவம் என்ற கோரிக்கை நிறுவனமயப் பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பினுள் கிழக்கு மாகாணப் போராளிகளுக்குப் பாரபட்சம் காட்டப் படுகின்றது. அதனாலேயே நாம் வெளியேறுகின்றோம் என அப்போது சொல்லப்பட்டது. இந்தக் காரணம் சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் தெளிவாகவே உணர்த்தின.
ஈழத் தமிழர்கள் தனியான தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேசிய இனம் சமயம், சாதி, பிரதேசம் என பல விதமான உட்பாகுபாடுகளைக் கொண்டதே. வரலாற்று அடிப்படையில் அவர்கள் ஒரு தனியான பிரதேசத்தில் வாழ்ந்து வந்தாலும் அவர்களைத் தனித்துவமான ஒரு பரிபாலனத்தின் கீழ் வாழ்ந்தவர்கள் என வகைப்படுத்திவிட முடியாது. ஆனால், அவர்கள் உணர்வு அடிப்படையில் ஒரு தேசிய இனமாக விளங்குகின்றனர். இதிலிருந்தே ஈழப் போராட்டத்திற்கான அவர்களின் ஆதரவு வெளியாகியது.
ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற உணர்வைப் பெறுவதிலும், ஒரு திரட்சியாக மாறி தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்துப் போராடியதிலும் சிங்கள இனவாதிகளின் பங்கே அதிகம். கட்சி அரசியலோ, கருத்தியல் பரப்புரைகளோ வழங்காத தமிழின உணர்வை அவர்களுக்கு எதிரான நெருக்கடிகளும், அடக்குமுறைகளுமே வழங்கியது எனக் கூறினால் அது மிகையாகாது. அத்தகைய சூழ்நிலைகளால் தோற்றுவிக்கப்ட்ட இன உணர்வை விட்டுவிட்டு, பிராந்திய உணர்வுடன் மக்கள் வாழலாம் என்ற கருத்தை விதைப்பவர்கள் இந்த இடத்தில் இருந்தே விடயங்களை அணுக வேண்டியது அவசியம்.
கடந்த காலங்களில் ஈழத் தமிழர்கள் சந்தித்த அவலங்கள் யாவும் அவர்கள் இன அடிப்படையில் தமிழர்கள் என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தன. முஸ்லிம் மக்களைத் தவிர்த்து வேறு சாதி, சமய, பிரதேச அடிப்படையில் தமிழ் மக்களை சிங்கள இனவாதம் அணுகியிருக்கவில்லை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்திருந்தாலும் கூட சிங்கள இனவாதச் சிந்தனை முடிவிற்கு வந்துவிட்டது என்றோ, இனவாதிகள் யாவரும் சிந்தனைத் தெளிவு அடைந்து விட்டார்கள் என்றோ கூறிவிட முடியாது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அண்மைய எடுத்துக்காட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருட்களை ஆய்வு செய்யும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள செயலணி. முழுக்க முழுக்க சிங்கள இனத்தவர்களையும், பௌத்த பிக்குகளையும் கொண்டதாகவே இந்தச் செயலணி அமைக்கப்பட்டுள்ளது. ஒப்புக்கேனும் – கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினராக விளங்கும் – தமிழர்கள் மத்தியிலிருந்தோ முஸ்லிம்கள் மத்தயிலிருந்தோ ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. இந்தத் தவறு அரசாங்கத்தின் தலைமைப் பீடத்திற்குப் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் கூட நிலைமையில் மாற்றமின்றித் தொடர்கின்றது.
கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் பன்குடாவெளி கிராமத்தில் நடைபெற்ற சம்பவம் மற்றுமொரு எடுத்துக்காட்டு. தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான மூன்று உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடாத்திய பௌத்த பிக்கு ஒருவர் அவர்களை சில மணிநேரம் சிறைப்படுத்தி வைத்திருந்தார். மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமைக் குருவான அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இந்தச் செயற்பாட்டில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிந்தும், அரசாங்கப் பணியாளர்களின் கடமைக்குக் குந்தகம் விளைவிக்கப் பட்டிருப்பது தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாத கையறு நிலையிலேயே காவல்துறையினர் இருந்தமையைக் காண முடிந்தது. ஆளும் தரப்பைச் சேர்ந்த ஒரு இராஜாங்க அமைச்சர், ஒரு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் உள்ளிட்ட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், இவர்களுக்கும் மேலாக ஒரு மாவட்ட நிர்வாகம், முப்படைகள் என சக்தியுள்ள பலர் உள்ள போதிலும் ஒரு சாதாரண பௌத்த பிக்கு மீது அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விட்டது.
கிழக்கிற்குக் தனித்தலைமை தேவை என்பவர்களும், அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் எனப் பரப்புரை செய்பவர்களும் இந்தக் கள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் சிங்கள இனவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு இயங்க முடியும், அதனைத் தாண்டி எதுவும் சுயமாகச் செய்துவிட முடியாது என்பதே உண்மை.
கிழக்கிற்குத் தனித் தலைமை வேண்டும் என்பவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் சிறுபிள்ளைத் தனமாகவே இருக்கின்றன. மக்கள் அபிவிருத்தியை எதிர்பார்க்கின்றார்கள், வேலைவாய்ப்பைக் கோரி நிற்கின்றார்கள். எனவேதான் நாங்கள் தனித்துச் செயற்பட விளைகிறோம் என்பது அவர்களின் நியாயமாக இருக்கின்றது. அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவை நாட்டு மக்களின் உரிமைகள். அவற்றை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. ஒரு அரசாங்கமானது தனது வாக்களித்த மக்களுக்காக மட்டும் சேவையாற்ற முடியாது. தனக்கு எதிராக வாக்களித்த மக்களை அரசாங்கம் வஞ்சிக்கின்றது என்றால் அதன் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள முயல்வதே அறிவாளிகள் செய்யக் கூடியது. எசமானர்கள் வீசி எறியக் கூடிய எலும்புத் துண்டுகளைப் பொறுக்கிக் கொள்வதைப் பெருமையாகக் கருத முடியாது.
தமிழ் மக்களின் பலம்மிக்க அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே எதிர்க் கட்சியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சி மாத்திரமல்ல. அது எதிர் அரசியல் நடத்தும் ஒரு கட்சியுமாகும். ஈழத் தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமாயின் இந்த எதிர்நிலை அரசியல் முக்கியமானது. அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு என்பவற்றுக்குக் கூட்டமைப்பு விரோதமான கட்சியல்ல. மாறாக, அந்தக் கட்சி அவற்றை சலுகையாக அல்லாமல் உரிமையாகப் பெற முயற்சிக்கின்றது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இதனை நிகழ்த்தியும் காட்டியது.
இந்த முறை தேர்தல் முடிவுகள் மக்களின் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டது என்பது கிழக்கிற்கான தனித்தலைமையை முன்மொழிபவர்களின் வாதங்களுள் ஒன்றாக உள்ளது. இது ஒருவகையில் ஏற்றுக் கொள்ளத்தக்க வாதமே. மக்கள் என ஒட்டுமொத்தமாகச் சொல்வதை விட இளைஞர்கள் இன்று ஆளும்தரப்பை ஆதரிக்கத் தயாராக உள்ளனர் என்பது உண்மையே. அவர்கள் கடந்தகால வரலாறுகளைத் தெரிந்து கொள்ளாதவர்களாக அல்லது தெரிந்து கொள்ள விரும்பாதவர்களாக இருந்து வருகின்றனர். இந்தப் போக்கு கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் அவதானிக்கப் பட்டுள்ளது. கிழக்கில் வாக்களித்த மக்கள் கிழக்கிற்கான தலைமையை வலியுறுத்துகின்றனர் எனப் புரிந்து கொண்டால் வடக்கில் ஆளுந் தரப்பிற்கு ஆதரவாக வாக்களித்த இளைஞர்களின் கருத்தை எவ்வாறு அர்த்தப் படுத்துவது.
தமிழர்களுக்கு எதிரான முதலாவது சிங்கள இனவெறித் தாக்குதல் ஆரம்பமாகியது கிழக்கு மாகாணத்திலேயே. 1956 ஆம் ஆண்டு தற்போதைய அம்பாறை மாவட்டத்தின் கல்லோயா குடியேற்றத் திட்டத்திலேயே தமிழர்களுக்கு எதிரான முதலாவது படுகொலை நிகழ்த்தப்பட்டது. யூன் 11 முதல் 16 வரை தமிழ் மக்களை இலக்குவைத்து சிங்களக் குடியேற்றவாதிகளாலும் கல்ஓயா அபிவிருத்திச் சபை பணியாளர்களாலும் அரச படையினரின் ஆசீர்வாதத்துடன் நடாத்தப்பட்ட இந்தக் கலவரத்தில் 150 பேர்வரை கொல்லப்பட்டதுடன் 100 பேர்வரை காயங்களுக்கும் இலக்காகி இருந்தனர்.
அது மாத்திரமன்றி சிங்கள இனவெறித் தாக்குதல்களுக்கு எதிரான முதலாவது வன்முறைச் செயற்பாடுகளும் கிழக்கிலேயே நிகழ்ந்தன. மட்டக்களப்பில் இருந்த சிங்களவருக்குச் சொந்தமான ஒரு தங்குவிடுதி எரியூட்டப்பட்டது. இதன்போது விடுதி உரிமையாளர்; இரண்டு தமிழர்களைச் சுட்டுக் கொன்றுள்ளார். காரைதீவில் வைத்து கல்ஓயா அபிவிருத்திச் சபை வாகனங்களுக்குக் கல்வீச்சு இடம்பெற்றுள்ளது. இது மாத்திரமன்றி கல்முனைப் பகுதியில் வாகனங்களில் வந்த காடையர்கள் மீது துறைநீலாவணையைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழர்களால் நிகழ்த்தப்பட்ட முதலாவது ஆயுதத் தாக்குதலாகவும் இது பதிவாகியது.
ஈழவிடுதலைப் போராட்டத்தை வடக்கிற்குள் சுருக்கிவிட முயற்சிக்கும் அறிவுஜீவிகள் கல்ஓயாவில் எதனால் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். இது தொடர்பான விடயங்களை இன்றைய இளைஞர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்துசென்ற பின்னரேயே கிழக்கிற்கான தனித்துவக் குரல் கேட்கத் தொடங்கியது என்பதல்ல. அது 1950 களிலேயே கேட்கத் தொடங்கி விட்டது. எவ்வாறு அரச உயர் பதவிகளில் வாய்ப்புக் கி;ட்டாத சிங்கள இனத்தவர்கள் ஒட்டுமொத்தத் தமிழர்கள் மீதும் கோபம் கொண்டார்களோ, அதனைப் போன்றே வாய்ப்பு கிட்டாத கிழக்கு மாகாணத்தவர் சிலரும் வடக்கு மாகாணத்தவர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்தார்கள். (இத்தகைய காழ்ப்புணர்வு உருவாகுமாறு வடக்கின் அதிகாரிகள் பலர் நடந்து கொண்டார்கள் என்பது தனிக்கதை.)
கிழக்குப் பல்கலைக் கழகம் 1981 அக்டோபர் முதலாந் திகதி பல்கலைக் கழகக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலாக கிழக்கிற்கான தனித்துவம் பற்றிய கதையாடல்கள் ஓங்கத் தொடங்கின. அந்தக் காலப் பகுதியில் பல்கலைக் கழகத்தில் சிற்றூழியனாகப் பணியாற்றியவன் என்ற அடிப்படையில் இத்தகைய கருத்தாக்கத்தின் பிதாமகர்கள் யார், அவர்களின் நோக்கம் எத்தகையது உள்ளிட்ட பல விடயங்களை நேரில் இருந்து பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அன்று கிழக்குத் தனித்துவம் பேசிய பலரும் பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் என்பது உபரிக் கதை.
அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவை காரணமாக கிழக்கு தனித்து இயங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் பலரும் கையில் எடுத்துள்ள மற்றுமொறு விடயம் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது.
தொடரும் …..