சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
வுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் போலிசார் குறித்து அவதூறாக பேசியதாக யூட்டியூபர் சவுக்கு சங்கர் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இதே குற்றச்சாட்டிற்காக கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட 16 காவல் நிலையங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கவும், ஒவ்வொரு வழக்கிற்காக ஒவ்வொரு ஊராக தன்னை அழைத்து செல்வதால், இந்த வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட இந்த 17 வழக்குகளும் ஒரே குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்டதா? என்பது குறித்து காவல்துறை விளக்கமளிக்க வேண்டும் எனவும், அந்த 17 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும் உத்தரவிட்டார்.
இதனிடையே சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆர்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த ஆட்கொணர்வு மீதான மனுவிற்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம், ஆகியோர் கொண்ட டிவிஷன் பென்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.
அப்போது சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ஆனால் சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதை தடுக்கவே குண்டர் சட்டத்தில் அடைத்ததாக காவல் துறை வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டார்.