புதுடெல்லியில் ஐஎஸ் பயங்கரவாதி ஆயுதங்களுடன் கைது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர நாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், புதுடெல்லியில் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி, ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புனே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ரிஸ்வான் அலி என்ற பயங்கரவாதியை புதுடெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வெள்ளிக்கிழமை கைது செய்திருக்கிறது.
இவர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாவார். ரிஸ்வான் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.3 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தது என்ஐஏ.
புதுடெல்லியின் ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பாதியில் படிப்பை கைவிட்டவர் ரிஸ்வான் என்றும் இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுக்கு ஆள் சேர்ப்பது உள்ளிட்ட சில பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இவர் இருந்த இடத்திலிருந்து வெடிபொருள்கள், டிரோன், முகாம் அமைப்பதற்கான பொருள்கள், மின்னணுவியல் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவரும் இவரது கூட்டாளிகளும் மகாராஷ்டிரம், குஜராத், நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாத சதிச் செயல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்ட ஆயுதத்துடன் கொள்ளை மற்றும் வழிப்பறிகளில் ஈடுபட்டதாகவும் என்ஐஏ குற்றம் சாட்டியிருக்கிறது.