நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமானது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க கொடியேற்றம் இடம்பெற்றது.
பெருமளவான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு அங்கப்பிரதட்சணம் உட்பட பல்வேறு நேர்த்திகளில் ஈடுபட்டனர்.
செங்குந்த மரபினரால் வடிவமைக்கப்பட்ட கொடிச்சீலை பாரம்பரிய முறைப்படி நேற்று வேல் மடம் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டு, அங்கு விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறிய தேரொன்றில் எடுத்துவரப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கையளிக்கப்பட்டது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள மகோற்சவத் திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன.
அந்தவகையில் எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு சப்பரத் திருவிழாவும், செப்டெம்பர் முதலாம் திகதி காலை 6.15 மணிக்கு தேர்த்திருவிழாவும், அடுத்தநாள் செப்டெம்பர் 2ஆம் திகதி காலை 6. 15 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.