ஜகதீப் தன்கர் – ஜெயா பச்சன் கருத்து மோதல்

மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கும் சமாஜவாதி எம்.பி. ஜெயா பச்சனுக்கும் இன்று அவையில் காரசாரமான கருத்து மோதல் நடைபெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக பாஜக எம்.பி. கன்ஷ்யாம் திவாரி கூறிய கருத்து தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கும் தலைவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அப்போது ஜெயா பச்சனை பேச அனுமதிக்கும்போது ஜகதீப் தன்கர் ‘ஜெயா அமிதாப் பச்சன்’ என்று குறிப்பிட்டார். அதற்கு ஜெயா பச்சன் எதிர்ப்பு தெரிவித்தார்.

‘ஜெயா அமிதாப் பச்சனாகிய நான், ஒரு கலைஞர் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய உடல் மொழி, பேசும் தொனி எனக்குப் புரிகிறது. என்னை மன்னியுங்கள், ஆனால் உங்கள் தொனி ஏற்றுக்கொள்ள முடியாதது. நீங்கள் அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கலாம், ஆனால் நாமெல்லாம் சக ஊழியர்கள்’ என்று பேசிக்கொண்டிருக்கும்போதே, ‘நீங்கள் பேசியது போதும், அமருங்கள்’ என்று ஜகதீப் தன்கர் கூறினார்.

மேலும் ‘நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஒரு பிரபலமாகவும் இருக்கலாம், நீங்கள் சரியாக நடந்துகொள்ள வேண்டும், நீங்கள் எதுவும் செய்யவில்லை, நீங்கள் மட்டுமே நற்பெயரைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தை ஒருபோதும் சுமக்க வேண்டாம், நாங்களும் நற்பெயருடன் இருக்கிறோம்’ என்றார் ஜகதீப் தன்கர்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை, மரியாதை அளிக்கப்படவில்லை என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் குற்றம்சாட்டி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ஜெயா பச்சன், அவைத் தலைவர் பேசிய தொனிக்கு ஆட்சேபணை தெரிவித்தார்.

‘நாங்கள் பள்ளிக் குழந்தைகள் அல்ல, எங்களில் சிலர் அவரைவிட மூத்தவர்கள். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் கார்கே பேச முற்படும்போது மைக் அணைக்கப்பட்டது. எப்படி இவ்வாறு செய்ய முடியும்? அவைத் தலைவர் அவரிடம் நடந்துகொண்ட விதம் வருத்தத்திற்குரியது. இதற்கு அவைத் தலைவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

மேலும், முன் வரிசையில் இருக்கும் ஆளும் கட்சியினர் சிலர் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போதிய மரியாதையை அளிக்கப்படவில்லை, ஆளும் கட்சியினர் அவரை தவறான முறையில் பேசுகின்றனர். எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷும் கூறினார்.

நேற்றும் வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்க மறுத்ததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து மோதலில், அவையில் தனக்கு போதிய ஆதரவு இல்லை என்று கூறி அவைத் தலைவர் ஜகதீப் தன்கரும் சிறிது நேரம் அவையில் இருந்து வெளியேறினார்.

இதற்கிடையில், வருகிற திங்கள்கிழமை வரை கூட்டத்தொடர் நடைபெறவிருந்த நிலையில் இரு அவைகளும் முன்கூட்டியே இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.