முதுநிலை நீட் தேர்வை ஒத்தி வைக்க முடியாது – உச்சநீதிமன்றம்
முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என, மாணவர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்தது.
நீட் இளநிலை தேர்வில் பல்வேறு முறைகேடு புகார்கள் நாடு முழுவதும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜூன் மாதம் நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வரும் ஞாயிறன்று தேர்வு நடைபெற இருக்கும் சூழலில், இத்தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது.
தேசிய தேர்வு வாரியம் இதனை முற்றிலுமாக மறுத்த நிலையிலும், நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சுமார் 50 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
மனுவில் தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடி, வெகு தொலைவில் தேர்வு மையங்கள் உள்ளிட்ட பிரச்னைகளையும் சுட்டிக் காட்டியிருந்தனர்.இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடைசி நேரத்தில் மனுவை தள்ளிவைக்க வேண்டும், தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்பதெல்லாம் வாடிக்கையாக நடந்து வருவதாக நீதிபதிகள் கூறினர்.
மாணவர்கள் எதற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்கள் என்பதை தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், இரண்டு லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விவகாரத்தில் 50 மாணவர்கள் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள் என்பதற்காக ஒத்திவைக்க முடியாது என்று தெரிவித்தனர். தற்போதைய சூழ்நிலையில் நீட் தேர்வை தள்ளிவைப்பது என்பது முடியாத காரியம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.