17 மாதங்களுக்கு பின் ஜாமீனில் வெளிவந்த மணிஷ் சிசோடியா
டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையும் சிபிஐ-யும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே ஜாமின் கோரி மேல்முறையீடு செய்த அவரது மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய் (BR Gavai) கே.வி விஸ்வநாதன் அமர்வு, மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கியதுடன் 10 லட்ச ரூபாய்க்கான பிணைத்தொகையை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.
நாட்டை விட்டு சிசோடியா வெளியே தப்பிச் செல்ல மாட்டார் என தெரிவித்த நீதிமன்றம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா நேற்று மாலை வீடு திரும்பினார். அவருக்கு வான வேடிக்கை முழங்க மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்களின் வெள்ளத்திற்கு மத்தியில் மணிஷ் சிசோடியாவை அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
முன்னதாக திகார் சிறையில் இருந்து மணிஷ் சிசோடியா வெளியே வந்ததும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு சென்று அவரது பெற்றோர் மற்றும் மனைவியை சந்தித்து பேசினார்.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அதிகாரத்தின் காரணமாகத் தான் தனக்கு ஜாமின் கிடைத்ததாகவும், இதேபோன்று அரவிந்த் கெஜ்ரிவாலும் விடுதலை செய்யப்படுவார் என்றும் மணிஷ் சிசோடியா நம்பிக்கை தெரிவித்தார்.