வயநாட்டில் நிலச்சரிவு : ஹெலிகாப்டரில் பார்வையிட்டார் பிரதமர் மோடி !
கேரள மாநிலம் வயநாட்டில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், பிரதமர் மோடி தனி விமானம் மூலம் கண்ணூர் சென்றடைந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம், நிலச்சரிவுக்குள்ளான இருவழிஞ்சி ஆற்றுப் பகுதிகள் மற்றும் மோசமாக பாதிக்கப்பட்ட பூஞ்சேரிமட்டம், முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளையும் பார்வையிட்டார். பாதிப்புகளை பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பிரதமருடன், கேரளா ஆளுநர் ஆரிப் முகமது, முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோரும் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. குறிப்பாக, சூரல்மலை மற்றும் முண்டக்கையில் 2 மணிநேரம் ஆய்வு செய்த மத்தியக் குழு, பேரிடரில் இருந்து மீண்டவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறியது.
இதனை தொடர்ந்து வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகாஸ்ரீ, கேரளா பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை அமைச்சர்களுடன் மத்திய குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு கேரளா அரசு சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.