1700 ரூபா சம்பளம் வழங்கும் இறுதித் தீர்மானம் திங்கட்கிழமை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கும் இறுதித் தீர்மானம் திங்கட்கிழமை… தற்போது 07 நிறுவனங்கள் 1700 ரூபாவை வழங்க விரும்பம் தெரிவித்துள்ளன… தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி!
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு 07 பெருந்தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. தற்போதைய தொழிலாளர் அமைச்சர் என்ற ரீதியில் திங்கட்கிழமை சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையைக் கூட்டி அது தொடர்பில் கலந்துரையாடி விசேட சட்டங்களைக் கொண்டுவரவுள்ளனர். அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பல வருடங்களாக உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படாமல் இருந்த நிதியை செலுத்த நம்புவதாகவும், தற்போது நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதால் அந்த பணத்தை வழங்கும் திறன் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்களின் கூட்டத்தில் இன்று (10) கண்டி கரலிய மாநாடு மற்றும் கலைநிகழ்ச்சிகள் மையத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டு மக்கள் அனைவரும் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். எப்படியோ தற்போது நாட்டின் பொருளாதாரத்தை ஒரு நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படாவிட்டாலும், மக்களுக்கு பெருமளவு நிவாரணங்களை வழங்க முடிந்துள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டை விட மக்களின் வாழ்க்கைச் சுமை குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் காரணமாகவே எம்மால் அவ்வாறானதொரு நிலையை உருவாக்க முடிந்தது. மேலும், எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை எட்டியுள்ளோம்.
அதன்படி 2042-ம் ஆண்டு வரை கடனை அடைக்க வேண்டும். இந்த உடன்படிக்கைகளில் இருந்து நாம் விலகிக் கொண்டாலோ அல்லது திருத்தம் செய்ய முயற்சித்தாலோ அந்த பலன்களை இழக்க நேரிடும். அப்போது ஒரு நாடாக நாம் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டிய நிலை வரும். எனவே இந்த திட்டத்தை தொடரலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தினால் இந்த நிலையை அடைந்துள்ளோம். இந்தியாவைப் போல நாமும் பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும். 2048-ம் ஆண்டுக்குள் அந்த விரைவான வளர்ச்சியை அடைய திட்டமிட்டுள்ளோம்.
மேலும், நாட்டைக் கைப்பற்றும் தலைவர்களைத் தேடுகிறார்களா அல்லது ஒலிம்பிக்கில் போட்டியிடுபவர்களைத் தேடுகிறார்களா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக தொழிலாளர் நல நிதி உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த நிதியை அடுத்த ஆண்டு முதல் செலுத்த எதிர்பார்க்கிறோம். தற்போது நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதால், அந்த பணத்தை வழங்கும் திறன் அரசுக்கு உள்ளது
மேலும் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தோட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற பணியாளர்கள் சம்பள உயர்வு பெற்றனர். மேலும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் அந்த நிவாரணத்தை தோட்ட மக்களுக்கு இன்னும் வழங்க முடியவில்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு 07 தோட்டக் கம்பனிகள் இதுவரை இணக்கம் தெரிவித்துள்ளன.
அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்குப் பின்னர் அந்த அமைச்சின் பொறுப்பு ஜனாதிபதி என்ற வகையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையுடன் கலந்துரையாடி இது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரவும், அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தேவையென்றால் விசேட சட்டங்களைக் கொண்டுவரவும் தயாராக உள்ளேன் என்று கூறவேண்டும்.
அந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பி. திகாம்பரன் எம்.பி இருவரும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவளிப்பார்கள் என நான் நம்புகிறேன் என்றார் ஜனாதிபதி .