பங்ளாதேஷ் சிறுபான்மையினரைப் பாதுகாக்க இந்தியா மும்முரம்.
பங்ளாதேஷில் உள்ள இந்தியர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான குழுவை இந்திய மத்திய அரசு அமைத்துள்ளது.
“பங்ளாதேஷில் இந்தியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது”, என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.
புதிதாக அமைக்கப்பட்ட குழு இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில் தற்போதைய நிலைமையை கண்காணிக்கும். மேலும் பங்ளாதேஷில் உள்ள இந்திய குடிமக்கள், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிகாரிகளுடன் இந்த குழு தொடர்பில் இருக்கும்.
ஏடிஜி தலைமையில் செயல்படும் இந்த குழுவில், எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), கிழக்குக் கட்டளை தலைமை ஐஜி, பிஎஸ்எப் தெற்கு வங்கம் எல்லைப்புற தலைமையகம் , பிஎஸ்எப் திரிபுரா எல்லைப்புற தலைமையகம், இந்திய நில துறைமுக ஆணையம் (எல்பிஏஐ) ஆகியவை உறுப்பினர்களாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பங்ளாதேஷில் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முகமது யூனுஸ், “சட்டம் ஒழுங்குதான் எங்களின் முதல் பணி. சட்டம் ஒழுங்கை சரிசெய்யாவிட்டால் ஒரு அடி கூடமுன்னேற முடியாது. உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், நாட்டில் யாருக்கு எதிராகவும் தாக்குதல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நபரும் நமது சகோதரர்கள். அவர்களைப் பாதுகாப்பதே எங்களின் தற்போதைய முக்கிய பணி’’ என்று தெரிவித்துள்ளார்.