கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கொலையாளி பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான சஞ்சய் ராய் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் பயன்படுத்திய செல்லிடப்பேசியில், ஆபாச படங்கள் பார்த்திருப்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இவர் காவல்துறையின் நல வாரியத்தின் தன்னார்வலராக இருந்திருப்பதும், இதனைக் காரணம் காட்டி இவர் மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலில், காவல்துறையின் பேரிடர் மேலாண்மைக் குழுவில் தன்னார்வலராக இணைந்து பிறகு காவல்துறை நல வாரியத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். பிறகு இவர் காவல்துறையின் வெளிப் பணிகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளையும் அவர் தொடர்புகொள்வது வழக்கமாக இருந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சேர்க்கை பெற லஞ்சம் வாங்கியது, அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்கிவிட்டால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கை பெற்றுத்தர நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் வாங்கியது போன்ற பல்வேறு முறைகேடுகளில் சஞ்சய் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் தன்னார்வலரைப் போல இல்லாமல், போலீஸ்காரர் போல செயல்பட்டதும் கொல்கத்தா காவல்துறை என பொறிக்கப்பட்ட டி-சார்ட் அணிவதும் வாடிக்கையாம். தனது வாகனத்திலும் அப்படியே ஸ்டிக்கரும் ஒட்டியிருப்பாராம். இதனால், இதர தன்னார்வலர்களே, இவர் போலீஸ்தான் என்று நினைத்திருக்கிறார்கள்.
காவல்துறை விசாரணையில், சஞ்சய் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், ஆனால், தான் செய்த குற்றத்துக்காக அவர் வருந்தவில்லை எனவும், தேவைப்பட்டால் தூக்கிலிடுங்கள் என்று திமிராக காவல்துறையிடம் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் வியாழக்கிழமை இரவுப் பணிக்கு வந்த பெண் மருத்துவர், படுகாயங்களுடன் சடலமாகக் கிடந்த வழக்கில், அவர் கொலை செய்யப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. இதையடுத்து, சஞ்சய் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருந்துள்ள நிலையில், இவர் பல திருமணங்கள் செய்து பெண்களை ஏமாற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.