தமுகூ- சஜித் பிரேமதாச புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும், இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கையெழுத்தானது. ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சஜித் பிரேமதாசவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் திகாம்பரம், எம்பி உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். வேறு பணி நிமித்தம் எம்பிகள் ராதாகிருஷ்ணன், வேலுகுமார் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மலையக தொழிற்சங்க முன்னணி செயலாளர் புஷ்பா, ஜனநாயக மக்கள் முன்னணி பிரசார செயலாளர், கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணிதரன், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பால சுரேஷ் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கருத்து கூறியாதாவது,
மலையக தமிழ் மக்கள் நலன் சார்ந்த, இத்தகைய ஒரு பரந்து பட்ட ஒப்பந்தம், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருடன் இதுவரை இந்நாட்டில் செய்யப்படவில்லை. நாம் எதிர்நோக்கும், அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார சவால்களை ஆவணமாக தொகுத்து நாம் ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையாக செய்து முடித்துள்ளோம். ஆகவே, இந்த நிகழ்வு இந்திய வம்சாவளி மலையக இலங்கையர் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க நடப்பாக பதிவாகின்றது.
ஏழு அத்தியாயங்கள், நாற்பத்தி எட்டு அம்சங்களை கொண்ட இந்த பல்நோக்கு உடன்படிக்கை, “மலையக சாசனம்” (Malaiyaha Charter) என்றும், “மலையக சமூகத்துனான ஒப்பந்தம்” (Social Contract with Malaiyaha Community) என்றும் கூற படுகிறது என சஜித் பிரேமதாசவும், நானும், திகாம்பரமும் நிகழ்வில் உரை நிகழ்த்தும் போது குறிப்பிட்டோம். இந்த ஆவணம் விரைவில் பொது பார்வைக்காக வெளியிட படும்.
கல்வி, தொழில் பயிற்சி, இளைஞர் முன்னேற்றம், சுகாதாரம், போஷாக்கு, வாழ்வாதார காணி, தொழில் வாய்ப்பு, வீடமைப்பு காணி, அரச பொது நிர்வாக கட்டமைப்புக்குள் மலையகம், ஆட்சி உரிமையில் பங்கு ஆகிய தலைப்புகளின் கீழ் பல்வேறு விடயங்களை இந்த ஆவணம் புரிந்துணர்வு உடன்படிக்கையாக கவனம் செலுத்தி உள்ளது.
அதேவேளை, நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொழில் நோக்கில், கொழும்பு உட்பட மாநகரங்களில் குடிபெயர்ந்து நிரந்தரமாக வாழும் மக்கள் எதிர்நோக்கும் வீட்டு வசதி, கல்வி வாய்ப்பு போன்ற விசேட பிரச்சினைகளை பற்றியும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கவனம் செலுத்துகின்றது.