சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்: தீர்வுகாண புதிய பங்ளாதேஷ் அரசாங்கம் முயற்சி.
பங்ளாதேஷில் இந்து சமயத்தினர் உள்ளிட்ட சிறுபான்மை சமயங்களைச் சேர்ந்தோருக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதற்கான முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகிய பிறகு பங்ளாதேஷில் சிறுபான்மை சமயங்களைச் சேர்ந்தோர் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
15 ஆண்டுகளாகப் பிரதமராகப் பதவி வகித்த திருவாட்டி ஹசினா இம்மாதம் ஐந்தாம் தேதியன்று பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் பதவி விலகவேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் மாளிகைக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து திருவாட்டி ஹசினா பதவி விலகினார்.
அதனையடுத்து பங்ளாதேஷில் இந்துக்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எதிராகத் தாக்குதல்கள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாயின. இந்துக்கள் வாழும் வீடுகள், அவர்களின் வர்த்தகங்கள், இந்துக் கோயில்கள் ஆகியவை தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்ளாதேஷின் சிறுபான்மையினரில் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆக அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களின் ஆதரவு, திருவாட்டி ஹசினாவின் அவாமி லீக் கட்சிக்கு முக்கியமாக இருந்து வந்ததெனக் கருதப்படுகிறது.
“சில இடங்களில் சிறுபான்மை சமயங்களைச் சேர்ந்தோர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக வந்துள்ள தகவல்கள் எங்களுக்கு மிகுந்த கவலை தருகின்றன,” என்று பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. இம்மாதம் எட்டாம் தேதியன்று பதவியேற்ற பிறகு இடைக்கால அரசாங்கம் முதன்முறையாக அதிகாரத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“இத்தகைய கொடூரமான செயல்களை நிறுத்துவதன் தொடர்பில் தீர்வுகாண உடனடியாக சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடனும் இதில் அக்கறை கொண்டுள்ள மற்ற குழுக்களுடனும் ஆலோசிப்போம்,” என்று இடைக்கால அரசாங்கம் கூறியது.
திருவாட்டி ஹசினா பதவி விலகியதைத் தொடர்ந்து நோபல் பரிசைப் பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.
ஊழல் வழக்கிலிருந்து முகம்மது யூனுஸ் விடுவிப்பு
இதற்கிடையே, ஊழல் வழக்கு ஒன்றிலிருந்து டாக்டர் யூனுஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக பங்ளாதேஷின் ஊழல் தடுப்புக் குழு தெரிவித்துள்ளது. பொருளியல் வல்லுநரான டாக்டர் யூனுசுடன் மேலும் 13 பேரும் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டது.