இலங்கையை நிச்சயம் மீட்போம்! – அநுரகுமார சபதம்.

“பெரும் நெருக்கடிக்குள் இருந்த ஆளும் குழுவால் எமது நாடு அழுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து எமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று நான் வேட்புமனுவில் இட்ட இந்த கையொப்பம் நிச்சயமாக வெற்றிக்கான கையொப்பமிடலாக அமையும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இப்பொழுது ஏனைய பாசறைகள் ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து, சிதைந்து அழுக்குகளைச் சேகரிக்கும் நிலைக்கு மாறியுள்ளன. தேசிய மக்கள் சக்தியாகிய நாம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே எமது பயணத்தை சரியாக ஆரம்பித்தோம்.

நாங்கள் மிகவும் பலம் பொருந்திய வகையிலும் ஒழுங்கமைந்த வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி இற்றைவரை இந்தப் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றோம்.

இன்னும் எங்களுக்கு ஒரு மாதத்தை விட சற்று அதிகமான நாட்கள்தான் இருக்கின்றன. இந்தக் கொஞ்ச நாட்களில் நாங்கள் மிகவும் பலம் பொருந்திய வகையில் எமது தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

கிராமங்களில் மிகவும் வலிமை மிக்க ஒரு ஒழுங்கமைப்பும் அதைப்போலவே, தேசிய மக்கள் சக்திக்குச் சொந்தமான பலம் பொருந்திய குழுக்களும் இருக்கின்றன. எனவே, இந்தத் தேர்தலை நிச்சயமாக எங்களால் வெற்றிகொள்ள முடியும்.

இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சவாலையும், எமது நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கான சவாலையும், மக்களுக்கு நல்ல வாழ்க்கையை உரித்தாக்கிக் கொடுப்பதற்கான சவாலையும் தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று வேட்புமனுவில் நான் இட்ட இந்தக் கையொப்பம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகரமான கையொப்பமிடலாக அமையும் என்பது நிச்சயம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.