ரூ. 1700 உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளேன்! – அமைச்சர் ஜீவன் பெருமிதம்.
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பள உயர்வு கிடைக்கவுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அன்று 1000 ரூபா நாளாந்த சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்தேன். அந்த உறுதிமொழியை நிறைவேற்றினேன். அதேபோல் 1700 ரூபா நாளாந்த சம்பளம் பெற்றுத் தருவதாக உறுதியளித்தேன். அந்த உறுதிமொழியும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1,700 ரூபா தொடர்பில் சம்பள நிர்ணய சபை எடுத்த முடிவு பெரும் வெற்றியாகும்.
அத்துடன், 1700 ரூபா சம்பளம் உயர்வைப் பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.