பங்களாதேஷ் – மாணவர் எழுச்சி
பல்கலைக் கழக மாணவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தீவிர போராட்டம் காரணமாக பங்களாதேஷ் நாட்டின் நீண்டகால ஆட்சியாளர் எனக் கருதப்பட்ட ஷேக் ஹசினா பதவியைத் துறந்து நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். அரசாங்க வேலைகளில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமது போராட்டத்தைத் தொடங்கிய மாணவர்கள் இறுதியில் தலைமை அமைச்சர் ஷேக் ஹசினா பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.
யூலை மாதம் முழுவதும் நடைபெற்ற போராட்டம் கடந்த திங்கட்கிழமை ஷேக் ஹசினா அவர்களின் பதவி விலகலை அடுத்து ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்தது. அதற்கிடையில் மாணவர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் என 400க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகிப் போயின. ஆயிரக்கணக்கானோர் கைதாகினர். பலர் காணாமல் போயினர். ஆகஸ்ட் 4ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதில் கால்துறையைச் சேர்ந்த 13 பேரும் அடக்கம்.
தற்போதுவரை பங்களாதேசில் நடைபெறுகின்ற விடயங்கள் நல்லவையாகவே தென்படுகின்றன. ஆனால் இந்த நிலை நீடிக்குமா என்பதே மிகப் பாரிய கேள்வி.
சிறி லங்கா அனுபவத்துக்கும் பங்களாதேஷ் நிலைமைக்கும் இடையில் ஒருசில அடிப்படை வித்தியாசங்களைப் பார்க்க முடிகின்றது. பிரதானமாக, இராணுவத் தளபதி நடத்திய கலந்துரையாடல்களுக்கு போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாணவத் தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அது மாத்திரமன்றி அவர்களின் கோரிக்கையை ஏற்று மொகமட் யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டும் உள்ளார். அரசியல்வாதி அல்லாத ஒருவர் தலைமையேற்று இருப்பது மாணவர்களின் போராட்டத்துக்குக் கிடைத்த மூலோபாய வெற்றி என்பதை மறுதலிக்க முடியாது.