யார் வந்தாலும் 150ரூபாவுக்கு பெட்ரோல் கொடுக்க முடியாது: வாக்கு பெற சிலர் பொய் சொல்கிறார்கள் – ஹர்ஷ
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஒரு லீற்றர் பெற்றோல் 150 ரூபாவிற்கு கொடுக்கப்படும் என சிலர் கூறினாலும் அதனை நிறைவேற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.
150க்கு பெட்ரோல் தருவதாக தான் சொல்லவில்லை, அது சாத்தியமில்லை என்றார்.
150 ரூபாய்க்கு பெற்றோல் தருவதாக கூறி வாக்குகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்த அவர், அந்த விலைக்கு எத்தனை நாட்களுக்கு பெற்றோல் வழங்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று 24 மணி நேரமும் மின்சாரம் உள்ளது, எரிபொருள் எரிவாயு வரிசைகள் இல்லை எனவும், அதனை வஞ்சகமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.