5 கோடி ரூபாய் மதிப்பிலான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது.
யாழ்ப்பாணம் அரியாலை பிரதேசத்தில் தென்னந்தோப்பு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 156 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், மன்னார் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் குழுவொன்று அரியாலைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் தென்னந்தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சாவை இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வந்து உரிய இடத்தில் மறைத்து வைத்து தென் மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கடத்த கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 39 மற்றும் 44 வயதுடைய யாழ்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.