மருத்துவ மாணவி கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு.

கோல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில், விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்ற கோல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 13ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

மருத்துவரின் உடைகள் சிதைந்த நிலையில், உடல் முழுவதும் காயங்கள் இருந்ததை அடுத்து மருத்துவமனை நிர்வாகத்தின் பதிலில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதற்கிடையே, முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து பதவி விலகிய கல்லூரியின் முதல்வர் மற்றொரு கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியது.

கோல்கத்தாவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், வியாழக்கிழமை இரவுப் பணிக்கு வந்த பெண் மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

முதற்கட்டமாக, மருத்துவ மாணவியின் உடல்கூறாய்வில், மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோல்கத்தாவில் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவி வலுவடைந்துள்ளது.

ஆர்.ஜி. கார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் இளநிலை மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் தனது பதவியைத் துறக்க 12 மணி நேரம் காலக்கெடு விதித்திருந்த நிலையில், திங்கட்கிழமை காலை அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், பதவியிலிருந்து விலகி, 24 மணி நேரத்தில் கோல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவக் கல்லூரியின் முதல்வராக சந்தீப் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரிக்கு ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை வருகை தந்த சந்தீப் கோஷை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர் ஜாவேத் அகமது கானிடம், ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரியில் நடந்ததை போன்று மற்றொரு சம்பவம் இந்தக் கல்லூரியிலும் நடக்க விடமாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.