பங்ளாதேஷ் பிரதமர் பதவி விலகியதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை: அமெரிக்கா.
பங்ளாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் பதவி விலகலில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
அந்த விவகாரத்தில் அமெரிக்கத் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அது தெரிவித்தது.
திருவாட்டி ஹசினா அண்மையில் பதவி விலகி, பங்ளாதேஷிலிருந்து தப்பி ஓடினார்.
“எங்களுக்கு எந்தவொரு பங்கும் இல்லை. இந்த நிகழ்வுகளில் அமெரிக்க அரசாங்கம் சம்பந்தப்பட்டிருந்ததாக வெளிவரும் அனைத்து அறிக்கைகளும் வதந்திகளும் தவறானவை,” என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கரின் ஜீன் பியர் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.
இந்தியாவில் உள்ள ‘தி இகனாமிக் டைம்ஸ்’ நாளிதழில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியான அறிக்கை ஒன்றில், பங்ளாதேஷின் செயிண்ட் மார்ட்டின் தீவை அமெரிக்கா அதன் கட்டுக்குள் கொண்டுவர எண்ணியதால் தமது பதவி விலகலில் அதற்குப் பங்கு இருந்ததாகத் திருவாட்டி ஹசினா குறைகூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி ஹசினா தமது நெருங்கிய சகாக்கள் மூலம் அந்தக் கருத்தைத் தெரிவித்ததாக அந்நாளிதழ் கூறியது.
இருப்பினும், திருவாட்டி ஹசினாவின் மகன் திரு சஜீப் வாஸெட், அவர் அத்தகைய கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என்று ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு செய்தார்.
இந்நிலையில், “பங்ளாதேஷ் மக்கள் பங்ளாதேஷ் அரசாங்கத்தின் எதிர்காலத்தை உறுதிசெய்ய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதுவே எங்களுடைய நிலைப்பாடு,” என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.