பெண் மருத்துவர் கொலை: விசாரணையை தொடங்கியது சிபிஐ!
கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவம் பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ காவல்துறையினர் புதன்கிழமை காலை தொடங்கினர்.
பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மாலை உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, தில்லியில் இருந்து புதன்கிழமை காலை கொல்கத்தா விமான நிலையத்துக்கு சிபிஐ அதிகாரிகள் குழு வந்தடைந்தது.
இந்த குழுவில், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே, மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
மருத்துவர்களின் பாதுகாப்புக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா நடத்திய பேச்சுவார்த்தையில் உறுதி அளித்த நிலையில், மருத்துவர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை(ஆக.8) இரவுப் பணிக்கு வந்த பெண் பயிற்சி மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
முதல்கட்ட மருத்துவ அறிக்கையின்படி, பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே மருத்துவமனையில் தன்னார்வலராக பணிபுரிந்த ஒருவர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.