மருத்துவ மாணவி கொலை விவகாரத்தில் கொல்கத்தாவில் இரவில் வெடித்த வன்முறை!
கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி மரணத்திற்கு நீதிகோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. மருத்துவமனை வார்டுகள், காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென ஒரு கும்பல், அங்கிருந்த தடுப்புகளை தள்ளிவிட்டு, காவல் வாகனங்களை தாக்கியதுடன், மருத்துவமனைக்குள் புகுந்து சூறையாடியது. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
வன்முறை அதிகமானதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் அங்கே கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர்.
கொல்கத்தா நீதிமன்றத்தின் கருத்தை அடுத்து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி. மேலும் இந்த வழக்கை- கொல்கத்தா காவல்துறையினரே 90% முடித்துள்ளதாகவும், வரும் ஞாற்றுக்கிழமைக்குள் இந்த வழக்கை சிபிஐ முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.