கோல்கத்தா பெண் மருத்துவர் கொலை: மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடும்பாதிப்பு.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கோல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் அரசு மருத்துவமனையில் 4 நாள்களுக்கு முன்பு 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி, நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் ஆகஸ்ட் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், மகாராஷ்டிராவில் இருக்கும் மருத்துவர்களும் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். அம்மாநிலம் முழுவதிலும் இருக்கும் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு உள்பட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் அவசரகால சேவைகள் தடையின்றி தொடரும் என்று மகாராஷ்டிர மாநில குடியிருப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பிரதிக் தேபாஜே பிடிஐயிடம் தெரிவித்தார்.

சண்டிகரிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன.

மருத்துவமனைகளில் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவர்கள் வெளிநோயாளி சிகிச்சைப் பிரிவின் சேவைகளை நிறுத்தினர்.

கோல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவர்கள் சங்கம், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அச்சங்கம் தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.