ராமேஸ்வரம் முதல் சென்னை வரை நீந்திச் சாதித்த 15 மாற்றுத்திறனாளி இளைஞர்கள்.
சென்னையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர்கள் 15 பேர் கின்னஸ் சாதனைப் பதிவிற்காக ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமேஸ்வரம் மண்டபம் பகுதிக் கடலில் இருந்து கிட்டத்தட்ட 604 கி.மீ. தூரம் நீந்தி சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கினர்.
அந்த நீச்சல் வீரர்கள் செவ்வாய்க்கிழமை மாலை மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்குள்ள மீனவ சங்கத்தினர் நீச்சல் வீரர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர், மீண்டும் தங்களது நீச்சல் பயணத்தைத் தொடங்கி, புதன்கிழமை சென்னை ஈஞ்சம்பாக்கத்தை அடைந்தனர். அவர்கள் வியாழக்கிழமை சென்னை மெரினா கடற்கரையை அடைவர் என்று கூறப்படுகிறது.