ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு

ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுவதாக மாநில துணை முதல்வர் பிராவதி அறிவித்துள்ளார்

ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற சுதந்தி தினக் கொண்டாட்டங்களில் அந்த மாநில துணை முதல்வர் பிராவதி பரிதா கலந்துகொண்டார்.

அப்போது மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.

இது சலுகையான அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கும் பொருந்தும். மாதவிடாய் நாள்களில் முதல் அல்லது இரண்டாவது நாளில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். இது அவரது விருப்பத்திற்கேற்ப என்றும் தெரிவித்துள்ளார்.

கென்யாவின் நைரோபியில் இந்தாண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சிவில் சொசைட்டி மாநாட்டில், ஒடிசாவைச் சேர்ந்த பெண்ணான பிரியதர்ஷினி மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு கோரி குரல் எழுப்பினார்.

மேலும், உலகெங்கிலும் உள்ள பெண்கள் மாதவிடாயின்போது ஏற்படும் உடல் வலியால் பாதிக்கப்படுவதாகவும் அவர் வாதிட்டார். இது சர்வதேச மாநாட்டில் அனைத்து பிரதிநிதிகளின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்தியாவில் ஏற்கெனவே கேரளம், பிகார் மாநிலங்களில் மட்டும் தான் மாதவிடாய் விடுமுறை அமலில் இருந்தது. தற்போது மாதவிடாய் விடுப்பு வழங்குவதில் மூன்றாவது மாநிலமாக ஒடிசா திகழ்கிறது.

முன்னதாக, பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கினால் அவர்களை பணியிடங்களிலிருந்து ஒதுக்கிவைக்க வழிவகுக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.