இந்தியாவில் விற்பனையாகும் உப்பு, சர்க்கரையில் பிளாஸ்டிக்!
இந்தியாவில் விற்பனையாகும் உப்பு மற்றும் சர்க்கரையில், மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. சமையலில் தவிர்க்க முடியாத இந்த 2 முக்கிய பொருட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் எப்படி வந்தது, அதனால் மனிதர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
ஆண்டுதோறும் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு படிப்படியாக அதிகரித்ததன் எதிரொலியாக, கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இதன் நீட்சியாக, கடலில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக், நுண்ணிய துகளாக மாறி மனிதர்களுக்கு எமனாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது. ஆம், கடல் நீரில் கலந்த மைக்ரோ பிளாஸ்டிக், தற்போது உப்பிலும் கலந்திருக்கிறது என்ற உண்மையை சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
மைக்ரோ பிளாஸ்டிக்….. மனிதர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள பொருள்…. 1907ஆம் ஆண்டே சிந்தடிக் பிளாஸ்டிக், கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அதன் உற்பத்தி 1950ஆம் ஆண்டுக்குப் பிறகே வேகமெடுத்தது. கடந்த 1990-களின் தொடக்கத்தில் பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை என்ற நிலை உலகெங்கும் உருவானது. அந்த அளவிற்கு அன்றாட பயன்பாடு அனைத்திலும் பிளாஸ்டிக் ஊடுருவியது.
எளிதில் மக்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக், இன்று மனித குலத்திற்கே எமனாக மாறி இருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் முன்னணி நிறுவனங்களின் உப்பு மற்றும் சர்க்கரை ஆகியற்றை ஆய்வு செய்த டாக்சிக்ஸ் லிங்க் (Toxics Link) என்ற அரசு சாரா ஆய்வு நிறுவனம், பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அயோடின் சேர்க்கப்பட்ட தூள் உப்பில் அதிகளவு மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களின் அளவு, 0.1 மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அயோடின் கலந்த ஒரு கிலோ தூள் உப்பில், 89.15 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களும், ஒரு கிலோ கல் உப்பில் 6.70 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களும் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கிலோ ஆர்கானிக் சர்க்கரையில், 11.85 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களும், ஒரு கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களும் உள்ளன.
சர்க்கரை மற்றும் உப்பில் கலந்துள்ள இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள், வெள்ளை, நீலம், சிவப்பு, கறுப்பு, பச்சை, வயலெட் மற்றும் மஞ்சள் நிறங்களில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் Rock salt எனப்படும் பாறைப் படிம உப்புகளில் மைக்ரோ பிளாஸ்டிக் அளவு மிகக் குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உப்பு, சர்க்கரை மட்டுமின்றி, நாம் உட்கொள்ளும் பல்வேறு பொருட்களிலும் இந்த மைரோ பிளாஸ்டிக் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. மனித உடலில் ரத்த ஓட்டத்தில் கலக்கும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.