ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பில் சுப்பிரமணியன் சாமி பொதுநல வழக்கு.
காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையைப் பறிக்காததற்கு விளக்கம் அளிக்கக் கோரி, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
இந்திய உள்துறை அமைச்சு ராகுல் காந்தியைத் தண்டிக்கத் தவறிவிட்டதாகவும் சுப்பிரமணியன் சாமியின் உதவியாளரும் வழக்கறிஞருமான சத்ய சபர்வால் தொடுத்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்தப் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அடுத்த வாரம் அம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்றும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர் என்று சாமி கூறியிருந்தார்.
அத்துடன், ராகுலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கும்படி அவருடைய தாயார் சோனியா காந்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி வருகிறாரா என்றும் சாமி தமது எக்ஸ் ஊடகப் பதிவு வழியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ராகுல் தமது குடியுரிமை, பிறந்த தேதி குறித்து தெளிவுபடுத்தும்படி கடந்த 2019ஆம் ஆண்டு உள்துறை அமைச்சு, அவருக்கு அனுப்பிய கடிதத்தையும் சாமி பகிர்ந்துள்ளார்.
அதற்கு ராகுல் விளக்கம் அளிக்காததால்தான் பொதுநல வழக்கு தொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.