புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயில்வத்தை பகுதியில் புதிய மதுபானசாலை ஒன்றை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டவளை குயில்வத்தை பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் மதுபானசாலை திறக்கப்படுவதற்கு தயாராக உள்ள கட்டிடத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளையில் இருந்து ஹட்டன் ஷானன் வத்தை வரையிலான ஐந்து கிலோமீற்றர்களுக்குள் நான்கு மதுபானசாலைகள் அமைந்துள்ளதாகவும், மற்றுமொரு மதுபானக்கடை திறக்கப்பட்டால் வீதியில் ஒரு கிலோமீற்றருக்கு ஒரு மதுபானசாலை அமையும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
வட்டவளை, குயில்வத்தை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாகவும், குயில்வத்தை தமிழ் பாடசாலைக்கு அருகாமையிலும், குயில்வத்தை தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு அருகிலும் மதுபானக்கடை திறக்கப்பட்டால், தோட்ட மக்களும், சுற்றுவட்டார காலனிகளில் வசிப்பவர்களும், ஏற்கனவே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு, பல பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் மதுபானசாலையை திறந்து அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிப்பதாகவும், அதற்கமைவாக அந்த இடத்தில் மதுபானக்கடை திறப்பதற்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேலும் தெரிவித்தனர்.